Friday, May 28, 2010

இவனும் இவளும் !



இவனும் இவளும்
ஒன்றாக படித்தார்கள்
ஒன்றாக வேலை பார்த்தார்கள்
ஒன்றாக காதலிக்கவும் செய்து
கல்யாணமும் செய்துகொண்டார்கள்
அதன்பிறகு
ஒன்றாகவே முடிவெடுத்து
பிரிந்தும் கொண்டார்கள் !

Tuesday, May 25, 2010

மழையுடன் கூடிய அந்தியும் , ஐஸ்கீரீம் சிறுமியும் !



ஐஸ்கீரீம் கேட்டு
அடம்பிடித்தழும் சிறுமியை
ஆர்வமாய் பார்க்கிறாள்
ஐஸ்கீரீம் விற்கும் சிறுமி !

-----------------------------------------

சரிதான்
இன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது
இனிவரும் நாட்களில் இவள்
தணலில் சுட்ட மக்கா சோளமோ ,
வெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்
பருவங்கள் மாறும் காலங்களில்
வியாபாரத்தை மட்டுந்தான்
மாற்றமுடிகிறது !

-----------------------------------------

இந்த பூங்காவினுள்
"பதினெட்டு வயதிற்கு கீழுள்ளோர்
அனுமதி இல்லை" என
அறிவிப்பு பலகை வைத்துவிடுங்கள்
குறைந்தபட்சம்
இவர்கள் வியாபாரிகளாகவாவது
மாறாமலிருக்கக்கூடும்!

Wednesday, May 19, 2010

நான் தோல்வியின் சித்திரம் !

ஒவ்வொரு முறை
வெற்றியை அணிந்துகொள்ளும்போதும்
தோல்வி
நிர்வாணப் படுத்தப்படுகிறது .

தோல்வியின்
கைவிரல்களுக்குள் சிக்காமல்
ஒரு சிறு பறவையாய்
வானேறி பறக்க தயாராகிறான்
வெற்றியாளன் .

அணிந்துகொள்ளப்பட்டு பின்
அவிழ்த்தெரியப் படும்போதுமுள்ள வலி
அதனதற்கு உண்டென்ற வகையில்
இப்போது
எனக்கும் உண்டு வலி !

Friday, May 7, 2010

உஷ்ணம் குழைத்த பிரியம் !

தீர்ந்த மழையில்
உடல் விறைத்து நிற்கும்
குல்முகர் பூக்களின் மரத்தினடியில்
ஒரு கோடைகாலத்தின்
வெம்மையோடு
தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

தனிமைகள்
பெரும்பாலும் உஷ்ணமாயிருக்கின்றன
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது .

காற்றில் மிதந்து வரும்
தனிமையின் இசை
ஒரு பஞ்சு மேகத்தைப்போல
எனைத் தொட்டு தடவி
பின்
வழிந்து வேறோரிடம் செல்கிறது .

அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .

கடைசியில்
காற்றோடு கதைபேசிக்கொண்டே வந்த
குல்முகர் பூவொன்று
கலைத்துச் சென்றதென் வெறுமையை
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை !

Wednesday, May 5, 2010

எதிரெதிர் !

வரம் வாங்கி
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .

வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !

Sunday, May 2, 2010

அடிமைகளின் முகங்கள்!

பரபரப்பாய் இயங்கும் நகரவீதியின்
ஏதாவது ஒரு சந்தில்
ஒரு கும்பல் எப்பொழுதும்
பஞ்சாயத்து செய்து
பிழைக்கிறது

செய்யாதவற்றையெல்லாம்
செய்ததாக ஒப்புக்கொண்டு
அடிவாங்கும்
ஒர் அப்பாவியும் எப்படியாவது
கண்ணில் படுகிறான்

இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்

உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.