Wednesday, November 25, 2009

சிவானசமுத்ரம் புகைப்படங்கள் .



















Thursday, November 19, 2009

கைமருந்து

அம்மா
எல்லா உபாதைகளுக்கும்
ஏதேனும் ஒரு கைமருந்து வைத்திருப்பாள் .

தின்னது செரிக்காமல்
வயிறு ஊதிக்கொண்டு அசமந்தமாக இருந்தால்
இஞ்சி போட்டு இடிச்சி
கைவசம் கசாயம் தயாராக இருக்கும் .

வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .

நெருஞ்சி முள் போல
உடம்பெல்லாம் சொறி எடுத்தால்
குப்பைமேனி கீரை அரைத்து
உடம்பெல்லாம் பூசி குளிக்கவைப்பாள்.

கத்திவெட்டுக்கு காபித்தூளும்
காலில் முள் தைத்தால் எருக்கலம்பாலும்
மணத்தக்காளி கீரையும் கூட
அம்மாவின் கண்டுபிடிப்புகள்தான் .

எல்லாத்துக்கும் ஒரு கைமருந்து வைத்திருந்தாலும்
இப்போவரை அம்மாவிடம் மருந்தில்லாத ஒரே உபாதை
தினந்தோறும் சாயங்காலம் ஏழு மணிக்கு வந்துபோகும்
அப்பாவின் குடிப்பழக்கம் மட்டும்தான் .


Wednesday, November 18, 2009

குழந்தையாகிப் பின் ....


ஒவ்வொருவராய்
முன்னால் வந்து ஆச்சர்யம் காட்டியும்
இங்கேப்பாரென சொல்லியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில் ஊர்ந்துக்கொண்டிருந்த
கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை.

Tuesday, November 17, 2009

நவீன விருட்சம்

என்னுடைய காக்கை கூடு படைப்பு நவீன விருட்சம், 15.11.2009 இதழில் வெளியாகியிருக்கிறது.




Sunday, November 15, 2009

சனிக்கிழமை இரவும் ஒரு மதுபான விடுதியும் .

 
 






 1.   உள்ளொன்று வைத்து 
      வெளியொன்று பேசும்விதமாய் இல்லாமல்
      வெளிப்படையாகவே
      திறந்தும் வரவேற்றும் கிடக்கின்றன
      மதுபான விடுதிகள்.

 

2.   வண்ண விளக்குகளின் உச்சத்தில் 
      மின்னும் ஆடைகளுடன்
      கண்சிமிட்டி ஆடும் நடனக்காரிகளிடம்
      கவனம் தேவை .
      சிலசமயம்
      மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
      அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
      சேலைக்காரி
      கொள்ளைக்காரி .

 

3.   இடுப்பில் குழந்தையுடன்
     அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
      நண்பன் சொன்னதிலிருந்து
      ரசிக்கமுடியவில்லை
     அவளின் அரையும் குறையுமான
     ஆட்டத்தை .

 

4.   எதை எதையோ 
     கலந்து கொடுத்தார்களென நினைக்கிறேன்
     நல்லவேளை
     சாராய நாத்தம் அடிக்கவில்லை
     வீட்டுக்கு வந்தபோது .

 

5.   விடியும்போது வந்து உறங்கி
     முழிப்பு வரும் சமயம் 
     உணரப்படும் தலைக்குத்தலோடு
     கூடவே வந்து போகிறது
     நடனக்காரிகளின்
    முகங்களும் .



Wednesday, November 11, 2009

பல்விழும் வயதில் ...

பேத்திகள்
கல்கோனா முட்டாய் சாப்பிட சொன்னதற்க்காய்
சாப்பிட்டு முன்பல் உடைத்துக்கொண்டார் அப்பா .

தாத்தாவிற்கும்
தங்களைப் போல் பல் விழுந்ததில்
பேத்திகளுக்கும் சந்தோசம் .

அப்பாகூட
பல் விழுந்ததை
பெருமையாகத்தான் சொல்லிக்கொண்டார் .

எல்லா நிகழ்வுகளைப்போலவும்
வழக்கம் போல
பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை அம்மா .


கம்பீரமாகவே பார்த்துப் பழகிவிட்ட அப்பாவை
இப்படி முன்பல்லில்லாமல் பார்க்க
எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கிறது .

Tuesday, November 10, 2009

ஒடங்காடாடுதல்

முள்ளு பாய்ஞ்ச ஒடங்காட்டுக்குள்ள
தலையை எட்டிப் பார்த்து ஒளிஞ்சிகிடும் ஒடக்கானை
சுருக்கு கண்ணி வச்சி பிடிச்சிட்டு வந்து
தெருச் சந்தியில சுடுமணல் மூடி
கருங்கல்லையும் மேல் தூக்கி வச்சி
கொலகாரங்கனக்கா சுத்தி நிப்போம் .

நாலு பெயலுவ ஒடக்கானைச் சுற்றி கம்போடு நிக்க
எவனாவது ஒருத்தன் ஓடிப்போய்

அம்மாச்சியின் பொடித்தடையில் பாதியை களவாண்டுட்டு வர
மூக்குப்பொடியை ஏத்திவிட்டு
கிறுகிறுத்து தலைசுற்றும் ஒடக்கான் முன்னால ஓட
தகர டப்பாவுல கொட்டடிச்சி பின்னால நாங்க ஓடுவோம் .

ஒடக்கான் கடிச்சா பெறவு பீயக்கரச்சிதான் குடிக்கனும்னு
எப்பம்பாத்தாலும் வையும் பொன்னுக் கெழவிக்கிட்ட
அப்பன்னா நீ முதல்ல குடிகெழவின்னு
ஒடக்காங்கயிரை கெழவிக்கிட்ட தாரதுமாரி பாவலாக்காட்டி
"குசும்புக்கார பெயயுள்ள" ன்னு கிழவி காரித்துப்புன பெறவு
பளிஞ்சான் காட்டி கோயில் ஆலமரத்துக்கு கூட்டம் ஓடும் .

ஆலம்விழுதுல தலைகீழ தொங்கவிட்டு
ஆளுக்கு மூணு கல்லு கணக்குல
மண்டையிலே குறிவச்சு எரிய
மயங்கிய மாறியே செத்தும் போகுமந்த ஒடக்கானை
முதமாரியே தகர டப்பா கொட்டடிச்சி
குழிதோண்டி ஒன்னுக்கடிச்சி

பெதச்சிட்டு வீட்டுக்கு வந்தா
முறிச்சி வச்ச வேப்பம் கம்போட
எதிர்பார்த்து உக்காந்திருப்பார்
திண்ணையில் அப்பா .

Thursday, November 5, 2009

பச்சிளம் பொழுதுகள் !!


என்னை
பார்த்து பார்த்து அழுவதற்கென்றே
எப்படியாவது
ஒரு குழந்தையேனும் பயணிக்கிறது
என் எல்லா ரயில் பயணங்களிலும் .

***********************

பூச்சாண்டிட்ட புடிச்சு குடுத்துருவேன்னு சொல்லி
என்னை காண்பித்தபோது
பருப்பு பிசைந்த சோற்றில் பாதியை
பயந்துகொண்டே
விழுங்கியது பக்கத்துவீட்டுக் குழந்தை .

*************************
மறைந்தும்
பின் வெளிவந்தும்
மாறி மாறி
பளித்து விளையாடிய குழந்தையை
பதிலுக்கு பளித்தபோது
சந்தோசத்தில் சிரித்து ஒளிந்துகொண்டது .

Wednesday, November 4, 2009

பிடித்தும் பிடிக்காதவை ( தொடர் பதிவு )

தோழர் மாதவராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்ததிலிருந்தே ஒவ்வொரு பதிவாக சென்று , பிடித்த , பிடிக்காதவைகளைஎல்லாம் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன் . நண்பர் நர்சிம் எழுதியிருந்த பதிவையும் படித்துக்கொண்டே வந்தால் , இறுதியில் இருந்தது அதிர்ச்சி - அட !நம்பளையும் அழைத்திருந்தார் . பிடித்தது ,பிடிக்காதது எல்லாவற்றையும் கிறுக்கி வைத்திருக்கிறேன் , பிழையிருந்தால் சுட்டுங்கள் தோழ்ர்களே !

ஆரம்பித்த தோழர் மாதவர்ஜுக்கும் , அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கும் நன்றிகள் பல ...

இந்தப் பதிவோட விதிகள்:(பரிசல் குரலில்) >> இது கட் காபி பேஸ்ட்

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


என்
பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)

********************

இனிமே தான் நான் ,



1.அரசியல் தலைவர் :
பிடித்தவர் : யாரையும் குறிப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை . ;-)

பிடிக்காதவர்: மு.க கூட்டம்


2.எழுத்தாளர்
பிடித்தவர் : இப்போதைக்கு வண்ண நிலவன் .
பிடிக்காதவர் : ஜெயமோகன்

3.கவிஞர்
பிடித்தவர்: நா .முத்துக்குமார்
பிடிக்காதவர் : பா. விஜய்

4.இயக்குனர்
பிடித்தவர்: யதார்த்தமாய் இயக்கும் எல்லோரும் .
பிடிக்காதவர் : பேரரசு

5.நடிகர்
பிடித்தவர்: மாதவன் (அன்பே சிவம் , தம்பி , எவனோ ஒருவன் ,நளதமயந்தி)
பிடிக்காதவர் : விஷால்

6.நடிகை
பிடித்தவர் : ஷாலினி
பிடிக்காதவர் : ஸ்ரேயா ( நடிப்புல மட்டும்தான் ஹி ஹி )

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : சமீபமாய் ஹாரிஸ்
பிடிக்காதவர் : குறிப்பிட இயலவில்லை ( எல்லோருடைய இசையிலும் எதோ ஒன்று பிடித்துபோய் விடுகிறது )

8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா குழுமம் .

பிடிக்காதவர் : மத்தவங்க படத்தையெல்லாம் புடுங்கி திரையிடுற ரெண்டு பேரக் கண்டாலே ஆகாது .

9.பிடித்த ஒளிப்பதிவாளர் :இதில் பிடித்த ஒளிப்பதிவாளர்களை மட்டும் சொல்வதாய் எண்ணம்

பி . சி . ஸ்ரீராம்
சந்தோஷ் சிவன்
கே . வி . ஆனந்த்
சதீஷ் குமார் ( பேராண்மை )

10.விளையாட்டு
பிடித்தது : கால்பந்து

பிடிக்காதது : சிறுவயதில் எப்போதுமே தோற்றுக்கொண்டிருந்த கோலிக்குண்டு ;-))

தொடர அழைப்பது :
மண்குதிரை
பிரியமுடன் வசந்த்
சேரல்





Tuesday, November 3, 2009

சில நிமிட மனிதம் !


சிக்னலில்
அடைத்து நிற்கும் வாகன நெரிசலில்
சிக்கி
வளைந்தும் நெளிந்தும்
சில வாகனங்களைத் தொட்டும்
வருகிறது
அந்த பிச்சைக்காரக் கிழவியின்
கிழிந்த சேலை நுனி.

Monday, November 2, 2009

நீர்த்துப்போனவைகள் !


கரும் பெரும் விழிகள் முழித்து
மீசை முறுக்கி
அருவாளேந்திய அய்யனார் சாமி
தப்பு செய்பவர்களை கண்ணை குத்துமென்று
சிலையைக்கடந்து வெளியூர் செல்லும்போதெல்லாம்
சொல்லிக்கொண்டே வருவாள் பாட்டி .
வெயிலடர்ந்த ஒரு மதிய வேளையில்
கள்ளன் போலீஸ் ஆட்டத்தினூடே
சிலையின் மறைவில்
தாடிக்காரனோடு ஒரு பொம்பளையும் இருந்ததை பார்த்தப்பிறகு
பாட்டி சொன்ன
முறுக்கு மீசை , முழிக்கண்
அருவாளையும் தாண்டி
அய்யனார் சாமி வெறும்
உருவப்பொம்மை என்றேப்பட்டது .