Monday, August 31, 2009கை நிறையச் சம்பளம்
கைக்கு அடக்கமான மொபைல்
புதிதாய் வந்திருந்த கார்
பழைய வீட்டின் திண்ணை உறக்கம்
ஒன்றிரண்டு காதல்கள்
ஒரே ஒரு கல்யாணம்
இப்படி
என்னவெல்லாம் நினைத்திருந்ததோ
விபத்தொன்றில்
மூளைச் சிதறி இறந்தவனின் மனம் !

-ஜெனோவா

படம் : நன்றி இணையம்

Friday, August 28, 2009

அழகெடுத்து அருந்தியவள் !


மூன்றாம் ஜாமத்தின் நடுவில்
வந்த கனாவில்
தெரிந்த புரவிக்கு மூன்று கண்கள்
ரெட்டை கொம்புகள் இருந்த முதுகில்
பஞ்சு தலையணைகள்
மூன்றாம் கண்ணின் பால்வெளி வெளிச்சம்
எனை விழுங்கி
இழுத்துக்கொண்டோடியது
பிடரிமயிர் கூச்செறிய - அதன் வேகம்
அண்டத்தில் பாதியை அரைநாளில் அளப்பதாயிருந்தது
நடுவில் வந்த மலைகளை
கடந்து பறந்து ஓடி
கடைசியில்
நந்தவனத்தில் நின்றபோது - அதிசயித்தேன்
பிரபஞ்சத்தின் ஒளி படிமங்களனைத்தும்
கூடியதுபோலொரு
தேவதையர் கூட்டம்
சற்றே விலக்கினேன் பார்வையை
கூட்டத்தின் நடுவிலே
ஒருபானை அழகெடுத்து அருந்திவிட்டு
அமர்ந்திருந்தாய் நீ !
நீ குடிக்கையில்
அங்கங்கே சிதறிய சில துண்டங்கள்
அல்லிப்பூவாய் மலர்ந்திருந்தன .
ஏதோ ஒன்று நிகழ்வை கலைக்க - திரும்பினேன்
புரவிகள் மாயமாயிருந்தன
மாயங்களின் தாக்கம் குறையாமல் - முன் திரும்பினேன்
தேவதைகளும் மாயம் இப்போது -
நீ
என்னை நோக்கி வர ஆரம்பித்திருந்தாய்
நான்
கனவினை நீட்ட முயன்று கொண்டிருந்தேன் !

-ஜெனோவா

Wednesday, August 26, 2009

நன்றி : இணையம்


ஏதோ ஒரு
அடர்ந்த கருப்பு கவியும்
நிழற்பிரதேசத்தில்
முகம் மறைத்து நிற்கிறேன்
எதிர்பாரா தருணங்களில்
கொதித்த ரத்தநாளங்கள் பீறிட்டு
சதை பொதிந்த உடலெங்கும் ரத்தத்தின் கோரங்கள்
நரம்புகள் பின்னிய மூளையின்
எந்திர சத்தங்களுக்குள்
குரலேற்றி கத்த முனைந்து தோற்று
உறக்கங்கள் தொலைத்து
உறவுகளுடைத்து வேற்றுகிரகவாசியாய் திரிகிறேன்
கண்களுக்குள் வீசிய
வெண்ணிலாவின் வெளிச்ச படிமங்கள்
இராப்பொழுது உணவாகின்றன
கேளாத்தொலைவிலிருந்து
மாயை போல உன்குரல் - எனைச்
சேர்ந்தோ , சேராமலோ திரும்பியிருக்கலாம்
தெரியவில்லை .
கொதித்து வெடித்த ரத்த நாளங்களால்
உடல் முழுமையாய் வெந்துபோயிருந்தது .

-ஜெனோவா

Sunday, August 23, 2009

வாழ்க்கைஅது
இதுவென்று அலைந்து
அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சேகரித்து
நிரப்பி
பின்
கணக்கிட்டுப் பார்த்தால்
வாழ்க்கை
வெற்றிடமாகவே உள்ளது .

-ஜெனோவா

Saturday, August 22, 2009

தெருவோர பிள்ளையார் !

வழக்கமாக சாப்பிடும் இரவு நேர சாலை ஓர தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு முடிக்கையில் , சத்தம் வராமல் விசும்பும் பெண்ணைப் போல மழை ஒழுகத்தொடங்கிருந்தது . சாப்பிட்டதற்கான முப்பது ரூபாயை கொடுத்து , அவன் சில்லறை தேடி மூன்று ரூபாய் எடுத்து தருவதற்குள் துளி சற்று பருத்தும் வேகத்துடனும் விழ ஆரம்பித்தது . நனைந்தாலும் நனைந்து விடுவேன் என்று பயந்து , மழைக்கு மரியாதை தருவதாயும் நினைத்துக்கொண்டு ஒரு மூடியிருந்த கடையின் வாசலில் ஒதுங்கிக்கொண்டேன் . ரோட்டை கடக்கையில் நிறைய சாலையோர கடைகள் அழகழகான குட்டி விநாயகர் சிலைகளை தாங்கி இருந்ததை கண்ட பின்புதான் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்ற நியாபகம் வந்தது . களிமண்ணால் அழகாக செய்யப்பட்டு வண்ணங்கள் பூசிய பிள்ளையார்களை தரையில் வைத்திருந்தார்கள் . வீடுகளுக்கென்று பிரத்யோகமாக செய்யப்பட்டவைபோல் தெரிந்தது . மிகவும் குட்டியாகவும் அழகாகவும் இருந்தது . நூற்றுக்கும் மேல் சிலைகளை கொண்ட கடையில் ஒரு ஆள் நின்றுகொண்டிருந்தான் . நாலைந்து பொடியன்கள் அருகிலிருந்தார்கள்.
வேலை சிறுவர்களாக இருக்கலாம் .

மழை வலுக்க தொடங்கியவுடன் , பக்கத்திலேயே வைத்திருந்த பெரிய பெரிய பாலீத்தீன் கவர்களை வைத்து மூட தொடங்கினார்கள் . என்னருகில் இரண்டு பேர் நின்று கொண்டு ஜருதா சேர்த்த பீடா போட்டுக்கொண்டு கதைத்தபடி இருந்தார்கள் . எனக்கு அந்த ஜருதாவின் வாடை அடி வயிற்றை பிரட்டுவதுபோல் இருந்தது . சற்று தள்ளி நின்று கொண்டேன் . மழையை கிழித்தெரிந்தபடி சாலையில் வண்டிகள் போய் வந்த வண்ணம் இருந்தன . இருசக்கர வண்டிகளில் வந்தவர்கள் அவசரமாய் அங்கங்கே நிறுத்திக் கொண்டார்கள் . மழை இப்போது பெரிதாக ஒப்பாரி வைத்து அழுவதைப் போல கொட்டிக் கொண்டிருந்தது . தூரத்தில் எங்கோ சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சின் சத்தம் மழையில் மெதுவாக மிதந்து , எடையிழந்த காற்றைப்போல் செவிப்பறைகளில் மோதித் திரும்பியது . பிள்ளையார் கடைக்காரன் மட்டும் குடையை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் .

இருபது நிமிட பே மழையில் சாலையின் ஓரங்களில் ஓடைப் போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . எனக்கு முன்னாள் குடை பிடித்து சென்றவன் ஒரு ஐஸ்க்ரீமை முழுங்கிவிட்டு கப்பை அந்த நீரில் எறிந்தான் . கப் தண்ணீரில் மிதந்தபடியே வேகமாக சென்று பிள்ளையார் சிலையில் தட்டி நின்று கொண்டது . அருகில் நின்றிருந்த காவல்காரர் ஜெர்க்கினை எடுத்து போட்டுக்கொண்டார் . நான் இடுப்புயரம் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொண்டேயிருந்தேன் . சில சமயங்களில் , இவர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைவது வீணான காரியமாகவே எனக்கு படும் . ஒருமுறை ஒரு காவல்காரர் சொன்னார் , அதில் பெரும்பாலும் ரவைகள் இருப்பதில்லை என்று . மழைச்சத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது . அந்த பீடா ஆசாமிகள் தூறலில்
நடக்க தொடங்கியிருந்தார்கள் .

இரண்டுக்கும் சற்று அதிகமான நிமிட நேரங்கள் யோசித்து ,நடக்கலாமென்று எத்தனித்த பொது , மழை மீண்டும் அடித்து பெய்ய தொடங்கியிருந்தது . அள்ளி முடிந்துகொண்டு சண்டைக்கு செல்லும் எதிர்வீட்டு அஞ்சலையைப் போல , மழையும் இன்று யாருடனோ தீவிர சண்டையிலிருப்பதாய் பட்டது .மழையின் வேகம் இன்னும் அதிகமாக , பிள்ளையார் போர்த்தியிருந்த பாலீதீன் சால்வை மெல்ல மழைக்கு வழிவிட்டது . அதற்குமுன்பே ஆறாய் ஓடிய மழை நீர் பாதி சிலைகளை கரைத்து விட்டிருந்தது. கடைக்காரன் மழையில் நனைந்து கொண்டே களிமண் சிலைக்களுக்கடியில் தேங்கிய நீருக்கு வடிகால் செய்து கொண்டிருந்தான் .

செவ்வண்ணம் பூசிக்கொண்டு வானம் மழையை ஊற்றிக் கொண்டிருந்தது . எதிர் மருத்துவமனை சன்னலில் பெண் ஒருத்தி மழையையே பார்த்துக்கொண்டிருந்தாள் . கணவனோ அல்லது அம்மாவோ , யாரோ ஒருவர் படுக்கையில் இருக்கலாம் . சிலர் குளிரில் புகைவிட ஆரம்பித்திருந்தார்கள் . காவல்காரர் ஒன்றும் சொல்லவில்லை . சிலைகளை காப்பற்ற முயன்று தோற்றுப்போன கடைக்காரன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து , மழையை வெறித்தபடி இருந்தான் . தீடிரென்று சத்தமாகவே புலம்பினான் . அவனை அதற்குமேல் பார்க்க இயலாமல் , மழையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன் . களிமண் செருப்பில் ஒட்டியிருந்தது .

-ஜெனோவா

Friday, August 21, 2009

காதல் !

உன்னையும் சேர்த்து
எல்லாம்
மறந்து போனப் பிறகும் ,
பார்த்த மறுகணத்தில்
முந்தியடித்துக் கொண்டு
வந்து
விழுகின்றன
உன் தெற்றுப்பல் இளிப்புகள் !

...............


இன்னொருமுறை
எழுந்து
துரத்தினாலும் துரத்தும் -
ஓரமாய்
கண் திறந்து தூங்கிய
நாயை
பார்த்துக்கொண்டே கடந்தேன்
அந்த
ஆளில்லா வீதியை !

......
-ஜெனோவா

Tuesday, August 18, 2009

இப்படியுமா வேலை ?

அலுவலகத்தில் பதினான்கு மணிநேரம் வேலைப் பார்த்த களைப்பில் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன் . சற்று பதட்டமாக உணர்ந்ததால் பக்கத்திலிருந்த காபி மெஷினில் ஒரு கப் எடுத்துக்கொண்டு , லிப்டில் இறங்கினேன் . கை சிறிதாக நடுங்கியதுபோல் தெரிந்தது . ஏதோ ஒன்று உள்ளிருந்து இதயத்தை வேகமாக அடிக்க செய்தது . நடந்து வாசலுக்கு வந்தேன் , செக்யூரிட்டி வணக்கம் வைத்தான் , ஏதோ பயந்துபோய் காபி கப்பை வீசிவிட்டு வேகமாக நடந்தேன் . நடையின் வேகத்தைவிட இதய அடிப்பின் வேகம் அதிகமாயிருந்ததை என்னால் உணர முடியாமல் இல்லை .

ஏதோ ஓர் இனம் புரியாத , வகை தொகை பிரித்து அறிய முடியாத பயம் ஏறிக் கொண்டது . நல்ல வேளையாய், அதோ ஓர் பேருந்து வருகிறது , என்ன கூட்டம் அதிகமாயில்லை ? ஆமா ராத்திரி பதினோரு மணிக்கு என்னைப் போல சில பேர்வழிகளை தவிர எவன் வருவான் ? மொத்தமே எழு பேர்தான் இருந்தார்கள் , ஏறி அமர்ந்தவுடன்தான் கவனித்தேன் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . பிரமையா? இல்லை இல்லை சர்வநிச்சயமாய் என்னையேதான் விழுங்கினார்கள் .முன்னால் அமர்திருந்தவனின் மீசை அடர்ந்து கனமாயிருந்தது , கோவைப்பழம் போல சிவந்த சாராயக் கண்களைக் கொண்டு ,ஜன்னலோரமாய் ஏதோ புலம்பிக்கொண்டே வந்தான் .

இந்த பேருந்து ஏன் கருமம் இவ்வளவு மெதுவாய் போய் தொலைக்கிறது ? இதற்கிடையில் நடுவில் ஏதோ நிறுத்தத்தில் நின்றது , நாலைந்து பேர் ஏறினார்கள் . பின்னாடி ஒருவன் நின்று கொண்டு பேருந்தை விட சத்தமாய் இருமலை சேர்த்துக் கொண்டு தும்மினான் - எனக்கு இதயம் வெளிவந்தது விடுமோவென பயம் அப்பிக்கொண்டது . இனம் புரியாத எதற்கு என்றே தெரியாத பதட்டம் , பயம் ... என்ன எளவு இது ? ... பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு வந்தான் , அருகில் இடமிருந்ததை காட்டி அமர சொன்னேன் , தவிர்த்துவிட்டான் பரவாயில்லை . இப்போது முன்னால் இருந்த மீசைக்காரன்
மீசையை தடவிக்கொண்டே இந்தியில் ஏதோ கேட்டான் ? எனக்கு இந்தி தெரியாது என்பதைவிட என்ன கேட்டிருப்பான் ? என்றே மனசு சுற்றி சுற்றி வந்தது . மண்டைக்குள் பூரான் நெளிவதை என்னால் உண்மையாகவே இப்போது உணரமுடிந்தது. முன்னாலிருந்தவன் தொண்டையை செருமினான் , நான் முகத்தை திருப்பி பேருந்தின் முன்பக்கமாய் விழித்தேன் .

பேருந்தின் முன்னால் நடு ரோட்டில் ஒரு பால் வண்டிக்காரன் மொபைலில் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தான் , "அறுதலி" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன் . ரோட்டோரம் காளிக்கொவிலில்ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்தது . யாரோ பக்கத்தில் மணி கேட்டார்கள் , வெடுக்கென்று கையை இழுத்து பின் நிதானித்து பதினொன்று இருபது என்றேன் . பேருந்தில் ஏறி இருபது நிமிடந்தான் ஆயிருந்தது ஆனாலும் இரவே கடந்து போனது மாதிரியும் , நான் வேறெங்கோ பயணிப்பது போலவும் தோன்றியது . எது நிஜமாய் நடக்கிறது ? எது நிழலாடுகிறது என்றே புரியவில்லை . மண்டைக்குள் இன்னும் பூரான் நெளிவது நிற்கவில்லை , ஆனால் அது உண்மை என்றே பட்டது.

பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களை கரைத்து என் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன் . "பைத்தியக்காரப்பய" என்று ஓட்டத்திலேயே இறக்கி விட்ட ஓட்டுனரை திட்டிக்கொண்டே அந்த மூத்திர சந்து வழியே நடந்தேன் . இப்படியே நேரே நடந்து இடது பக்கம் திரும்பினால் என் வீடு வந்துவிடும் . அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வந்தது , சந்திலேயே ஒதுங்கிக்கொண்டேன் . பயமெல்லாம் நீர்த்து போய் மூத்திரமாய் போவதாய் கற்பனை கூட்டிக் கொண்டேன், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை .

வீட்டிற்கு இன்னும் யாரும் வந்திருக்கவில்லை , மணி பன்னிரண்டு ஆகப்போவுது எங்கே போய் தொலைந்தான்கள் இவங்கள் ?
முதுகில் ஏதோ சுமையை இப்பொழுதான் தூக்கி வைத்திருப்பது தெரிந்தது . மடிக்கனிணிப் பை . அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது பாதி எழுதிய நிலையிலிருந்த மென்பொருளை மீதியும் முடித்து , நாளைக்கு மீள்ப்பார்வைக்கு வைக்க வேண்டுமென்பது நினைவுக்கு வந்து மறைந்தது . இப்போது மண்டைக்குள் நாலைந்து பூரான்கள் வேகமாய் நெளு, நெளுவென்று நெளிந்தன .
மடிக் கணினிக்குள் நிறைய கரப்பான் பூச்சிகளும் , பல்லிகளும் இருப்பதாகப் பட்டது , அப்படியே அசையாமல் எடுத்துக் கொண்டு போய் முன்னாடி இருந்த வேப்ப மரத்தில் ஓங்கி படீரென்று அடித்து உடைத்துவிட்டு , மேனேஜருக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டேன் " என்னால் இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் வர முடியாதென்று " . பூரான் நெளிவது இப்போது நின்று போயிருந்தது .

-ஜெனோவா

Saturday, August 15, 2009

சுதந்திர தின நினைவு அஞ்சலி !

" சைனா பென் வித் டார்ச் லைட் சார் " டேக் இட் சார் .... காதருகில் சத்தம் கேட்டபொழுது விழித்துக் கொண்டேன் . டிராபிக் அதிகமுள்ள நகரமென்பதாலும், வீட்டுக்கு செல்ல எப்படியும் ஒன்றரை மணி நேரம் பிடிக்குமென்பதாலும் , அலுவலகத்தில் நான்கு பேருக்கென ஒதுக்கப்பட்ட காரில் ஏறியவுடன் தூங்கி விடுவதுண்டு .
இந்த குரலை கேட்டு விழித்தபோதுதான் நாங்கள் சிக்னலில் காத்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது . காரின் ஜன்னலோரமாய் வந்து நின்ற அந்த சிறுவனின் முகம் , மிகவும் ஆர்வமாய் ஒளிர்ந்தது . வார்த்தைகளை விரயம் செய்யாமல் கண்களாலேயே என்ன ? என்பதுபோல் பார்த்தேன் . என் முகத்தில் ஓடிய இட்லி சாம்பார் முகக்களையை கண்டுகொண்டான்போல , தமிழிலேயே ..
"சார் , சைனா பென் சார் , டார்ச் லைட் கூட இருக்கு சார் ... வெறும் பத்து ரூவா சார் , வாங்கிக்கோ சார் " என்றான் , வேண்டாம் என்பதுபோல் தலையாட்டிவிட்டு முகம் திருப்பிக்கொண்டேன் . கன்னியாக்குமரியில் வெளிநாட்டு பயணிகளிடம் சுத்தி நின்று கொண்டு சங்கு விற்கும் பொடியன்கள் போல , இப்போது பெங்களூருவில் பெரும்பாலான சாலைகளில் சிக்னலுக்கு காத்திருக்கும் அந்த மூன்று வினாடிகளில்தான் பல வியாபாரங்கள் தொடங்கிமுடிகின்றன .

விளக்கு மஞ்சளில் இருந்து சிவப்பிற்கு பெயர்ந்து பச்சை திரும்புவதற்குள் , டார்ச் லைட் , பென் , காது குடையும் குச்சி , கண்ணாடி துடைக்கும் துணி என ஆளுக்கொன்றாய் கையில் தூக்கி கொண்டு ஓடிவருவார்கள் சின்ன பயன்கள் , சில சிக்னல்களில் வயதானவர்களையும் பார்த்திருக்கிறேன் . நாளை சுதந்திர தினம் என்பதால் இன்று சாலையில் நிறைய பேர் நாட்டுக் கோடியை ( ஆம் அந்த மூவர்ண கொடியேதான் ) எல்லோரிடமும் பேரம் பேசி ? விற்றுக்கொண்டிருந்தார்கள் . என் டிரைவர் கூட இருபத்தைந்து ரூபாய் சொன்னக் கொடியை பத்து ரூபாய்க்கு கேட்டு பார்த்துவிட்டு வேண்டாமென்றான் . எனக்கு ஒருபக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் அசுயையாகவும் இருந்தது . நாட்டுக் கொடிக்கென்று ஒரு மரியாதை உண்டா இல்லையா ? மனதிற்குள் பள்ளியில் படிக்கும்போது பாடிய " தாயின் மணிக்கொடி பாரீர் ..." பாடல் வந்து போனது . சாலையில் அதுவும் சிக்னலில் மூன்று நிமிட அமைதி பொழுதில் , அவனவன் பரபரவென்று கையில் பத்து கொடிகளை வைத்துக்கொண்டு பேரம் பேசி விற்ற பொழுது ... பாரத மாதவே வந்து தலைவிரிக்கொலமாய் , வழியும் கண்ணீருடன் அவனுக்காய் மடிபிச்சை கேட்பதாகவே எனக்கு தோன்றியது . கடைகளுக்குள் மட்டும் விற்கப்படும் சாராயத்திற்கு கூட ஒரு கவுரவம் இருப்பதுபோல மனதிற்கு பட்டது.

பக்கத்திலிருந்த வண்டிக்காரன் , கொடியை தடவிப் பார்த்துவிட்டு காட்டனா ? பாலியெஸ்தரா ? என்கிறான் , இன்னொரு கொடி விற்பவன் வியர்த்து வழிந்த முகத்தை கொடியினால் துடைத்து கொள்கிறான் . என்னால் இதையெல்லாம் வாய்விட்டு புலம்பாமல் பார்க்கமுடியவில்லை , கண்களை மூடிக்கொண்டேன் . மூன்று நிமிட காத்திருப்பு எனக்கு மூன்று மணி நேரமாய் தோன்றியது .

யோசித்துக்கொண்டே , பக்கத்திலிருந்த அனிதாவுடன் இதைப் பற்றி பேசினேன் . அனிதா குறைந்த வயதில் , பிரச்சினைகளை வெறும் கண்களாலேயே தெளிவாக பார்க்க தெரிந்த தமிழ்பெண் .

" அனிதா , இப்படி நாட்டுக்கொடியை சாலை நடுவில் மரியாதையில்லாமல் பேரம் கேவலப் படுத்துவது , பாரதத் தாயை ஏலம் விடுவது போல் உங்களுக்கு படவில்லையா ? " என்றேன் .

" ஜெனோவா , மாராப்பை இழுத்து மாற்றானிடம் கொடுத்தது நாம் , இன்று மானம் போகின்றதே என்று புலம்புகின்றோம் " என்றால் அவள் .

புரியாமல் , புதிராகப் பார்த்தேன் , அவளை ...

வெயில் வழி வந்தவனுக்கு நீர் மோர் கொடுத்து இளைபாற்றிய நாட்டில் , பாட்டிலுக்குள் தண்ணீரை அடைத்து அதை பாலை விட அதிகமாய் விற்க செய்தது நாம் .

சந்தை தெருவுக்கு போய்கொண்டிருந்தவனை சந்தடியில்லாமல் சூப்பர் மார்க்கெட் இழுத்து வந்தது நம் தப்பு .

நம் நாட்டு நேரத்துக்கே யோசிப்பவனிடம் போய் , இப்போது அமெரிக்காவில் காலை ஆறு மணி என்று பினாத்தியதும் நம் தப்பாகவே படுகிறது .... அவன் உழைப்பை நமக்கு சாதகமாக்க பிசினஸ் , பிசினஸ் என்று அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லி வைத்தோம் . இப்பொழுது அவனும் பழகிவிட்டான் எப்படி பிசினஸ் செய்வதென்று ?

முதல் படிதான் நாட்டுக்கொடி , போகப் போக பாருங்கள் , நாயனம் , நாதஸ்வரம் , நாட்டியம் என்று இந்தியத் தன்மையே இல்லாமல் போகப் போகிறது .
சொல்லுங்கள் ஜெனோவா , இதில் நமக்கு எங்கிருந்து வந்தது மானப் பிரச்சினை ? என்றாள் .

எனக்கு தலை சுற்றுவது போல் உணர்ந்தேன் ...

பேசிக்கொண்டிருக்கும்போதே கை பேசி ஒலித்தது , மேனேஜர் கூப்பிட்டு நாளை அலுவலகம் வருமாறும் , எதோ முக்கியமான வேலை இருப்பதாகவும் கூறினார் .

நாளை சுதந்திர தினம் என்றேன் ,
க்ளையன்ட்ஸ் இருப்பது அமெரிக்காவில் என்றார் ...

வந்த கோவத்தை அடக்க முடியாமல் , வீட்டிற்கு வந்து டிவியை ஆன் செய்தேன் ..
யாரோ ஒரு அரசியல் வியா (வா) தி , " வி வில் பி த சூப்பர் பவர் இன் அனதர் டென் இயர்ஸ் " என்று மென்று கொண்டிருந்தார் ...

சத்தம் போட்டு அழ வேண்டும் போலிருந்தது எனக்கு , ஆனந்தக்கண்ணீர் விட்ட சுதந்திர திருநாளில் இப்போதெல்லாம் ஆத்திரத்தில் தான் கண்ணீர் வருகிறது ...

அட போங்கையா நீங்களும் உங்க சுதந்திரமும் ... சொல்ல மறந்திட்டேன் ..அறுபத்து மூன்றாவது சுதந்திர தின நினைவஞ்சலி உங்களுக்கும் எனக்கும் ........

- ஜெனோவா

Sunday, August 9, 2009

நீ எங்கிருக்கிறாய் ?

இந்த
ஆயிரம் முகங்களில்
எந்த முகம்
உன் முகம் !

வாசலுக்கு முன்னால்
உதரிப்போட்ட செருப்புகள் போல
களைந்து கிடக்கின்றன
கடலினுள் கட்டுமரங்கள் !

பெரிய நந்திக் கோவிலின்
தெப்பக்குளத்து படித்துறையை போல
அந்த பாற்கடலின் படித்துறையாய்
நம் அழகிய ஊர் !

அலையின் மடியிலே -கடலின் கரையிலே
நிலா முற்றமாய் உன் வீடு !
நிலவே நிழல் சாட்சியாய்
உன் முகம் !


காலையில்
ஒருமணிநேரம் வரும்
நல்ல தண்ணீர் பிடிக்க
கையில் குடத்தோடு நீ !
ஒரு மணிநேரத்தில்
ஓரிருமுறை வந்துபோகும்
உன்னை பிடிக்க
கையில் வலையோடு நான் !


ஒரே ராட்டினத்தில் சுற்றினாலும்
எதிரெதிர் திசைகளில் செல்லும் பெட்டிகள் போல
நம் பார்வைகள் !

என் நேர்க்கோட்டு பார்வையில்
உன் கண்கள் நாணி வளைகின்றன !
வெகு சில சமயங்களில் - முட்டிக்கொள்ளும்
உன் தீக்குச்சி பார்வையால்
என் ரோமங்கள் பற்றிஎரிகின்றன !

ஆதாமுக்கு
பாதி கடித்த ஆப்பிளை வழங்கிய காதல - உன் கையால்
கொஞ்சமும் குறையாக் காரத்துடன்
ஒரு பச்ச மொளகாயை தந்தது எனக்கு !
கடலுக்கு போகுமுன்
உன் அப்பாவுடன் குடித்த கஞ்சிக்கு
'தொட்டுக்க' கொடுத்து அது !
உன் சுண்டு விரல் போலவே இருந்த - அந்த மிளகாயை
கடிக்க கூட மனமில்லை ...
சும்மா ... ஒரு கடி கடித்துவிட்டு
எதோ நீ தந்த கடிதம் போல
பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன் !

கடல் முடிந்து , கரையேறுகையில்
ஆவி பறக்கும் கடுங்காப்பி வாளியுடன்
காற்றில் அரைத்தாவணி பறக்க
ஓடி வரும் உன்னை பார்க்கவே
சில மீன்கள் சாகாமல் துள்ளிக்கொண்டிருக்கும் !

நீ
தொட்டபிறகே கரையேருவதாய்
கட்டுமரம் அடம்பிடிக்கும் !
ஒருவழியாய் உன் நினைவுகளைத் தவிர - மற்றனைத்தையும்
ஒதுங்க வைத்துவிட்டு
வந்தமர்வேன் உன் வீட்டு முற்றத்தில் ...

கரிய சுட்ட கருவாட்டு வாசனையோடு
உன் வாசனையும் சேர்த்து
கஞ்சி தருவாய் - கஞ்சியை விட்டு விட்டு
உன் வாசனையை மட்டும் உறிஞ்சுவேன் நான் !

தண்ணீர் குழாய் ....
பச்சை மிளகாய் ...
ஆவிபறக்க கடுங்காப்பி ..
உன் வாசனையில் கஞ்சி ...

இப்போதெல்லாம்
சிரிக்க பார்க்கிறாய் ...
பார்க்க சிரிக்கிறாய் ...
காலை விரிந்து மாலை சுருங்கும் வரை
கூடவே இருக்கும் வலை போலவே நீயும் !

இம்சித்து திரிந்தாய்...
இரண்டற கலந்தாய் ...
என் இதய காந்ததினுள்ளே
திசை முள்ளாய் வந்தமர்ந்தாய் !

உன் வீட்டு முற்றம்
என் கோவிலானது -
உன் நினைவுகள்
என் சட்டை சுருக்கங்களாயின !


அன்று
பல ஊர் கூடி தேர் இழுக்கும்
அந்த வருட
அம்மன் கோவில் திருவிழா !

சில பத்தாயிர
சனங்கள் கூடி தேரிழுக்க
கடல் ஓரக் கடைவீதியில்
உன் பட்டு கைகளுக்கு
பளிங்கு வளைகள்
வாங்கி வைத்தோம் !

கண்ணாடி வளையல் என்றாலும்
என்னிடமிருந்து வந்தால்
வைர வளையல் என்று சொல்லி
தோள் சாய்ந்தாய் !


தேர் இழுப்பின் முடிவிலே
கடலில் கால்னநிக்கும் சடங்குக்காய்
மொத்த சனமும்
கடலை நோக்கி இறங்கிட ..
கடை வீதி மூச்சு விட முடியாமல் திமிறித்தான் போனது !
அப்போது உனக்கந்த ஆசை வந்தது
முதலில் நீதான் கால் நனைக்க
வேண்டுமென்ற விளையாட்டு ஆசை !
வாங்கி வைத்த வளயல்களோடு
உன்னையும் கைகளில் அள்ளிக்கொண்டு
கூட்டத்திற்கு முந்திக்கொண்டு - கடலடியில்
கால் நனைத்த வினாடி சந்தோசத்தின் சிரிப்புகள் முடியுமுன்னரே
வந்து தொலைத்து - அந்த
ராட்சச பேரலை ...

ஒரு
காட்டுயானையின் தாக்குதலை
தாங்கமுடியாத
வாழைமரத்தைப் போல -
பிடுங்கி எறியப்பட்டோம் இருவரும் ...
வினாடிப் பொழுதுகளில்
மொத்தக்கூட்டமும் உள்ளே இழுக்கப்பட
என்னோடு
பிணைக்கப்பட்டிருந்த உன் கையை பிடித்து
வெளியே இழுத்த கணத்தில்
மீண்டும் ஒரு அலை ...
அவ்வளவுதான்
என்னை பார்த்து கடைசியாய்
சிரித்த உன் முகம் - கை நழுவி செல்கையில்
அந்த கண்ணாடி வளையல்களை மட்டுமே விட்டுசென்றது !


உன் கல்லறை
என் கோவிலானது !
உன் நினைவுகள்
என் சிக்கல் விழுந்த வலைகளாயின !

கடல் கொண்டாலும்
நீ வருவாய் !
என்றாவது என் கட்டுமரத்தை தொடுவாய் !

இன்றும் பல ஆயிர சனங்கள்
கால் நனைக்க செல்கின்றன ...
இந்த ஆயிரம் முகங்களில்
எந்த முகம் உன் முகம் ?
எந்த கைகள்
என் பிடியை நழுவி சென்ற கைகள் ?

-ஜெனோவா


Saturday, August 8, 2009

ஸ்மைல் ப்ளீஸ் !

புகைபடமென்பது பாட்டிக்காலத்து சுருக்குப்பை காசைப்போல காலத்தை களவாடி வைத்துக்கொள்ளும் காகித அச்சாகவே இருக்கின்றது . சிறு வயதிலிருந்தே காமிரா என்பது ஒரு கனவுப்போருளாகவே இருந்து வந்தாலும் ... நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் எண்ணிக்கையோ நிறைய உண்டு ,குறிப்பிட்டு சொல்வதாயின் என்னுடைய எல்லா முகப்பாவங்களிலும் பல கருப்பு வெள்ளை படங்களும் , சில வண்ணப்படங்களும் கிட்டும் !


ஆரம்ப காலங்களில் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளியில் படித்தபோது ,ஆண்டு இறுதிகளில் வகுப்புவாரியாக புகைப்படமெடுத்து தருவார்கள் . நான் வாத்தியார் புள்ளை என்பதால் எனக்கு இலவசமாகவே கிடைக்கும்,மற்றவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் . அந்த மேற்படி நாளில் காலையிலிருந்தே சந்தோசம் ( அது சந்தோசமா இல்லை ஆர்வமா என்று இன்றும் புரிவதில்லை ) தாளமுடியாமல் செக்காளிகளுடன் சேர்ந்து சாயங்காலத்தில் யார் யார் அருகில் யார் நிற்பதென்பது பேசி வைக்கப்படும் ,பெரும்பாலும் கடைசி வரிசையில் போடப்படும் உயர்ந்த பெஞ்சின் மேல் ஏறி நிற்பதற்கே போட்டிகள் அதிகம் ! அதே சமயத்தில் சட்டை ( வெள்ளை சட்டையும் , நீல நிற அரைக்கால்சட்டையும்) அழுக்காகி விடகூடாதென்பதிலும் கவனமாயிருந்தது இன்னும் நினைவிலிருக்கிறது . மாலை நாலு மணிக்கெல்லாம் அந்த வேப்பமரத்தினடியில் போட்டோ எடுக்க ஆரம்பிப்பார்கள் , முன்னமே பேசி வைத்தார்ப்போல செக்காளிகளுடன் சேர்ந்து நிக்கலாமேன்றால் இந்த போட்டோ எடுப்பவன் விடாமல் என்னையே குறிவைத்து " அந்த குட்டத்தம்பி முன்னால வாப்பா " என்பான் .... எல்லோருக்கும் ஆத்திரம் வரும் எனக்கு மட்டும் அழுகை பொங்கி வர கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போட்டோவில் தெரியுமாறு செய்து , பின்பு அழுகையை அடக்கி மூஞ்சை மாற்றுவதற்குள் , அவன் போட்டோவை எடுத்து முடித்திருப்பான் - இப்பொழுதுதான் உண்மையிலே கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் . அப்படியே எட்டாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரான அப்பாவிடம் சென்று அடம்பிடித்து அவருடனாவது நிக்கலாமேன்றால் , இந்த பாழாய்ப்போன அக்காமார்கள் கூப்பிட்டு " சார் பையன் " என்று அருகில் நிற்க வைத்துவிடுவார்கள். மறுபடியும் முகம் கோணி , அழுகை முட்டுவதற்குள் சுதாரித்துக்கொண்டு போட்டோவிற்கு முறைத்து வைப்பேன். ஆம் நிஜமாகவே எனக்கு காமிரா முன் மட்டும்தான் முறைக்க வரும். ஆனால் இப்படியாக தோல்வியில் முடிந்த ஒவ்வொரு போட்டோபிடிப்பு நிகழ்விற்கு பின்னரும் இரண்டு நாள்களுக்கு வகுப்பிற்கு சென்றதில்லை . பரட்டைத்தலை பயலுகளை விட இந்த குட்டைப்பாவாடைகள் ரொம்பவே பளிப்பு காட்டுவார்கள் . யாராவது ஒவ்வொரு முறை " அழுமூஞ்சி அம்மனாங்கி " என ஆரம்பிக்கும்போதும் ," எங்க அப்பாகிட்ட சொல்றேன் பாரு " என்று அப்பாவை தாங்கி நிற்பேன் . இதனால்தானோ என்னவோ அதற்க்கப்புறம் அந்த பள்ளியில் இருந்து தாண்டிய பின்பும் கூட , காமிராவுக்கு முன்பு நிற்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து , காமிராவுக்கு பின்னால் நிற்கும் ஆசை அதிகமாகியது . அதற்கப்புறம் கல்லூரி முடித்து வேலைக்கு வந்த பின்னால் , ஒரு மெழுகுவர்த்தியை கூட விடாமல் இரண்டு மணிநேரம் எரியவிட்டு படம்பிடித்ததெல்லாம் தனிக்கதை .பேரனுடன் போட்டோ எடுக்க சென்றிருந்த அப்பா, போட்டோவுக்கு நிற்பதற்குள் இவன் பண்ணிய ரகளைகளை என்னோடு ஒப்பிட்டு கூறியபோது மனதிற்குள் நினைத்துகொண்டேன் அடுத்த பிறந்தநாளுக்கு அவனுக்கு காமிரா பரிசளிப்பதென்று!


-ஜோ

Wednesday, August 5, 2009

காதலி என்ற வெற்றிடத்துக்கு !

இன்றோ
நாளையோ - ஏகாந்தம் நிரம்பிவிட்ட
வேறோர் நாளிலோ
நாம் சந்திக்க கூடும் !

மழைக்காக ஒதுங்கி நிற்கும் வேளைகளில்
பேரூந்து நிறுத்ததிலோ -
மதியஉணவு வேளைகளில் - ஏதோவொரு
உணவகத்திலோ -
இல்லை
ரயில் நிலையம்
கடற்கரையோர கடைகள்
வெள்ளிக்கிழமை கோவில்கள் ...
இப்படி எங்கோ சில இடங்களில்
உன் முகத்தோடு
என் நியாபகங்கள் முட்டிட நேரிடலாம் !

என் குழந்தையோடு நானும்
கணவனோடு நீயும்
எதிரெதிர் வழிகளில் கடந்து பிரியலாம் !
தாண்டிச்செல்லும்போதோ
தாண்டிய பின்போ - முகம் காணாமல்
முறுவலித்து செல்லலாம் !

காலமும் உன் கணவனும்
கண்திறந்தால் -
இரண்டொரு வார்த்தைகளை பரிமாறிகொள்வோம்
குடும்பம் , சொந்த வீடு
உடன்படித்த கீதா -- இப்படி
நீண்டுகொண்டே போகும்பேச்சில்
தயவு செய்து
"எப்படி இருக்கிறாய் " என்று மட்டும்
கேட்டுவிடாதே
அழுதாலும் அழுதுவிடுவேன் நான் !

-ஜோ

Monday, August 3, 2009

கைகாட்டி மர(ன)ம் !

திரும்ப திரும்ப
யோசித்தும் பலனில்லை
எப்போது வாழ்க்கை நழுவியதேன்றோ
வாய்ப்புகள் வரப்புகளாய் மாறியதேன்றோ
யோசித்தும் அறியமுடியவில்லை !

வாலிபம் ஓங்கி - எதிர்
வாகனம் தெரியா அளவுக்கு
வேகத்தில் பாய்ந்த வாழ்க்கை -
அயர்ந்த பொழுதில்
வழுக்கிக்கொண்டு - பிடி
நழுவிக்கொண்டு
விழுந்து தொலைத்தது சாலை ஓரமாய் !

திக்கென்பது தெரியா நிலையிலே
திசைஎன்பதும் புரிய்படாமலே
தேங்கிய நான் - கைகாட்டி மரமாய்
சாலை ஓரமாய் !

கடந்து செல்பவர்களே !
முடிந்தால் , உங்களால் முடிந்தால்
எதிர் வருபவர்க்கு அறிவுறுத்துங்கள்
வாழ்கையில் (ன்) வேகம் ஆபத்தானதென்று !

கைகாட்டி மரமாய் நிற்பதன் வலி
அதுவுமாகி போன பின்பே புரியும்!

வாய்ப்புக்களை வடிகாலாக மாற்றுங்கள்
வரப்புகளாக அல்ல !!
- ஜோ