இருக்கும் வீட்டை மாற்றி
வேறுவீடு பார்க்கலாமென
முடிவெடுத்தாகிவிட்டது .
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
முன்புபோல் இப்பொழுதெல்லாம் முடிவதில்லை
தரைத்தள வீடு அவசியம்.
பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்
பையனைக் கூட்டிப்போக வர
இலகுவாக இருக்கும்.
அடுக்குமாடி
குடியிருப்புகளில் எனக்கு
அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை .
புதுஇடத்தில் நல்ல
வேலைக்காரி அமைந்துவிட்டால்
மனைவியோடு மல்லுக்கட்டல் இருக்காது .
பூங்கா ஒன்றும் அருகிருந்தால்
அப்பாவின்
சாயங்காலங்கள் இனிமைப்படும் .
எல்லாம் ஒருவழியாய்
அமைந்துவிடலாம் ஆனால் என்ன
அம்மாவுக்குதான்
சௌகரியப்படாமல் போகக்கூடும் புதுவீடு ,
என்ன செய்ய ?
இப்போதெல்லாம்
இந்தியக் கழிவறைகள் கொண்ட
வீடுகள் கிடைப்பதுதான்
அபூர்வமாயிருக்கிறது இந்நகரத்தில் !.
(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )