Friday, December 31, 2010

ரசம் இழந்த முகம் !

எல்லா நிகழ்வுகளுக்கும்
ஒரே மாதிரியான
முகபாவங்கள் காட்டுவதை
இப்போதே நிறுத்திவிடுங்கள் .

பழிதீர்க்கப் பட்டவனின்
சாவுக்கு செல்கையிலும்
ஒரு துளி ஊமை கண்ணீருக்காய்
பிராத்தியுங்கள் .

இறந்தவன் உற்ற நண்பனெனில்
பலூனுடைந்த கணத்தில்
அழும் சிறுமியைப்போல
வெடித்தழுது கூச்சலிடுங்கள் .

தூரத்து உறவினரின் திருமணத்திற்கு
ஒரு மலரைப்போல மென்புன்னகை
நெருங்கிய சொந்தமெனில்
காற்றிலாடும் நாணலாய் மகிழ்ச்சி முகம் .

ஒரு உயிரின் பிறப்பை
புருவமுயர்த்தி வரவேற்கலாம்

ஒரு துரோகத்தின் நாளை
தூக்க முகத்தோடு கழிக்கலாம்

ஒரு வெற்றியின்போது
அமைதியை தழுவ விடுங்கள்

ஒரு தோல்வியை
நம்பிக்கை கண்களோடு எதிர்கொள்ளுங்கள்

இவையெல்லாம் தாண்டி

நீங்களும்
ஒரு காதல் முறிவை சந்திக்க நேர்ந்தால் .
அழுது புரண்டுகொண்டிருக்காமல்
ஜன்னல் கம்பியிலிருக்கும் ஒரு சிட்டுக்குருவியையோ
நின்று போய் கிடக்கும் பழைய கடிகாரத்தையோ பார்த்தபடி
யாருக்கும் முகம் கொடுக்காமல்
கடந்துவிடுங்கள் .

5 comments:

rvelkannan said...

உண்மைதான் ஜெனோ ...
என்ன இருக்கிறது இங்கே ... எதற்கு கோபப்படவேண்டும் சரிதான்.

நேர்த்தியான நயத்துடன் நல்லாவே வந்திருக்கு ஜெனோ இந்த கவிதை.
பிரச்சனையையும் சொல்லி அதிலிருந்து வெளியேறும் சன்னல்களையும்
வெகு இயல்பாக திறந்து விடுகிறது
அருமை ஜெனோ...

ப்ரியமுடன் பாலா said...

அருமை ... !! அடிக்கடி எழுதுங்கள் சார் :)

Marimuthu Murugan said...

ஜோ..
வாப்பா!!!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இந்த கவிதை மற்றும் சென்ற கவிதையும் அருமை..

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

Anonymous said...

Wow joe. Keep writing more. World is waiting for u.