Saturday, August 15, 2009

சுதந்திர தின நினைவு அஞ்சலி !

" சைனா பென் வித் டார்ச் லைட் சார் " டேக் இட் சார் .... காதருகில் சத்தம் கேட்டபொழுது விழித்துக் கொண்டேன் . டிராபிக் அதிகமுள்ள நகரமென்பதாலும், வீட்டுக்கு செல்ல எப்படியும் ஒன்றரை மணி நேரம் பிடிக்குமென்பதாலும் , அலுவலகத்தில் நான்கு பேருக்கென ஒதுக்கப்பட்ட காரில் ஏறியவுடன் தூங்கி விடுவதுண்டு .
இந்த குரலை கேட்டு விழித்தபோதுதான் நாங்கள் சிக்னலில் காத்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது . காரின் ஜன்னலோரமாய் வந்து நின்ற அந்த சிறுவனின் முகம் , மிகவும் ஆர்வமாய் ஒளிர்ந்தது . வார்த்தைகளை விரயம் செய்யாமல் கண்களாலேயே என்ன ? என்பதுபோல் பார்த்தேன் . என் முகத்தில் ஓடிய இட்லி சாம்பார் முகக்களையை கண்டுகொண்டான்போல , தமிழிலேயே ..
"சார் , சைனா பென் சார் , டார்ச் லைட் கூட இருக்கு சார் ... வெறும் பத்து ரூவா சார் , வாங்கிக்கோ சார் " என்றான் , வேண்டாம் என்பதுபோல் தலையாட்டிவிட்டு முகம் திருப்பிக்கொண்டேன் . கன்னியாக்குமரியில் வெளிநாட்டு பயணிகளிடம் சுத்தி நின்று கொண்டு சங்கு விற்கும் பொடியன்கள் போல , இப்போது பெங்களூருவில் பெரும்பாலான சாலைகளில் சிக்னலுக்கு காத்திருக்கும் அந்த மூன்று வினாடிகளில்தான் பல வியாபாரங்கள் தொடங்கிமுடிகின்றன .

விளக்கு மஞ்சளில் இருந்து சிவப்பிற்கு பெயர்ந்து பச்சை திரும்புவதற்குள் , டார்ச் லைட் , பென் , காது குடையும் குச்சி , கண்ணாடி துடைக்கும் துணி என ஆளுக்கொன்றாய் கையில் தூக்கி கொண்டு ஓடிவருவார்கள் சின்ன பயன்கள் , சில சிக்னல்களில் வயதானவர்களையும் பார்த்திருக்கிறேன் . நாளை சுதந்திர தினம் என்பதால் இன்று சாலையில் நிறைய பேர் நாட்டுக் கோடியை ( ஆம் அந்த மூவர்ண கொடியேதான் ) எல்லோரிடமும் பேரம் பேசி ? விற்றுக்கொண்டிருந்தார்கள் . என் டிரைவர் கூட இருபத்தைந்து ரூபாய் சொன்னக் கொடியை பத்து ரூபாய்க்கு கேட்டு பார்த்துவிட்டு வேண்டாமென்றான் . எனக்கு ஒருபக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் அசுயையாகவும் இருந்தது . நாட்டுக் கொடிக்கென்று ஒரு மரியாதை உண்டா இல்லையா ? மனதிற்குள் பள்ளியில் படிக்கும்போது பாடிய " தாயின் மணிக்கொடி பாரீர் ..." பாடல் வந்து போனது . சாலையில் அதுவும் சிக்னலில் மூன்று நிமிட அமைதி பொழுதில் , அவனவன் பரபரவென்று கையில் பத்து கொடிகளை வைத்துக்கொண்டு பேரம் பேசி விற்ற பொழுது ... பாரத மாதவே வந்து தலைவிரிக்கொலமாய் , வழியும் கண்ணீருடன் அவனுக்காய் மடிபிச்சை கேட்பதாகவே எனக்கு தோன்றியது . கடைகளுக்குள் மட்டும் விற்கப்படும் சாராயத்திற்கு கூட ஒரு கவுரவம் இருப்பதுபோல மனதிற்கு பட்டது.

பக்கத்திலிருந்த வண்டிக்காரன் , கொடியை தடவிப் பார்த்துவிட்டு காட்டனா ? பாலியெஸ்தரா ? என்கிறான் , இன்னொரு கொடி விற்பவன் வியர்த்து வழிந்த முகத்தை கொடியினால் துடைத்து கொள்கிறான் . என்னால் இதையெல்லாம் வாய்விட்டு புலம்பாமல் பார்க்கமுடியவில்லை , கண்களை மூடிக்கொண்டேன் . மூன்று நிமிட காத்திருப்பு எனக்கு மூன்று மணி நேரமாய் தோன்றியது .

யோசித்துக்கொண்டே , பக்கத்திலிருந்த அனிதாவுடன் இதைப் பற்றி பேசினேன் . அனிதா குறைந்த வயதில் , பிரச்சினைகளை வெறும் கண்களாலேயே தெளிவாக பார்க்க தெரிந்த தமிழ்பெண் .

" அனிதா , இப்படி நாட்டுக்கொடியை சாலை நடுவில் மரியாதையில்லாமல் பேரம் கேவலப் படுத்துவது , பாரதத் தாயை ஏலம் விடுவது போல் உங்களுக்கு படவில்லையா ? " என்றேன் .

" ஜெனோவா , மாராப்பை இழுத்து மாற்றானிடம் கொடுத்தது நாம் , இன்று மானம் போகின்றதே என்று புலம்புகின்றோம் " என்றால் அவள் .

புரியாமல் , புதிராகப் பார்த்தேன் , அவளை ...

வெயில் வழி வந்தவனுக்கு நீர் மோர் கொடுத்து இளைபாற்றிய நாட்டில் , பாட்டிலுக்குள் தண்ணீரை அடைத்து அதை பாலை விட அதிகமாய் விற்க செய்தது நாம் .

சந்தை தெருவுக்கு போய்கொண்டிருந்தவனை சந்தடியில்லாமல் சூப்பர் மார்க்கெட் இழுத்து வந்தது நம் தப்பு .

நம் நாட்டு நேரத்துக்கே யோசிப்பவனிடம் போய் , இப்போது அமெரிக்காவில் காலை ஆறு மணி என்று பினாத்தியதும் நம் தப்பாகவே படுகிறது .... அவன் உழைப்பை நமக்கு சாதகமாக்க பிசினஸ் , பிசினஸ் என்று அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லி வைத்தோம் . இப்பொழுது அவனும் பழகிவிட்டான் எப்படி பிசினஸ் செய்வதென்று ?

முதல் படிதான் நாட்டுக்கொடி , போகப் போக பாருங்கள் , நாயனம் , நாதஸ்வரம் , நாட்டியம் என்று இந்தியத் தன்மையே இல்லாமல் போகப் போகிறது .
சொல்லுங்கள் ஜெனோவா , இதில் நமக்கு எங்கிருந்து வந்தது மானப் பிரச்சினை ? என்றாள் .

எனக்கு தலை சுற்றுவது போல் உணர்ந்தேன் ...

பேசிக்கொண்டிருக்கும்போதே கை பேசி ஒலித்தது , மேனேஜர் கூப்பிட்டு நாளை அலுவலகம் வருமாறும் , எதோ முக்கியமான வேலை இருப்பதாகவும் கூறினார் .

நாளை சுதந்திர தினம் என்றேன் ,
க்ளையன்ட்ஸ் இருப்பது அமெரிக்காவில் என்றார் ...

வந்த கோவத்தை அடக்க முடியாமல் , வீட்டிற்கு வந்து டிவியை ஆன் செய்தேன் ..
யாரோ ஒரு அரசியல் வியா (வா) தி , " வி வில் பி த சூப்பர் பவர் இன் அனதர் டென் இயர்ஸ் " என்று மென்று கொண்டிருந்தார் ...

சத்தம் போட்டு அழ வேண்டும் போலிருந்தது எனக்கு , ஆனந்தக்கண்ணீர் விட்ட சுதந்திர திருநாளில் இப்போதெல்லாம் ஆத்திரத்தில் தான் கண்ணீர் வருகிறது ...

அட போங்கையா நீங்களும் உங்க சுதந்திரமும் ... சொல்ல மறந்திட்டேன் ..அறுபத்து மூன்றாவது சுதந்திர தின நினைவஞ்சலி உங்களுக்கும் எனக்கும் ........

- ஜெனோவா

3 comments:

Unknown said...

//அட போங்கையா நீங்களும் உங்க சுதந்திரமும் ... சொல்ல மறந்திட்டேன் ..அறுபத்து மூன்றாவது சுதந்திர தின நினைவஞ்சலி உங்களுக்கும் எனக்கும் ........//


Ithu thaan Joe..
-indu

Anonymous said...

ithu nijama nadanthatha? Indian flags - a road la vithangala, oruthan vervaiaya thodchana da?
really very bad....

முதல் படிதான் நாட்டுக்கொடி , போகப் போக பாருங்கள் , நாயனம் , நாதஸ்வரம் , நாட்டியம் என்று இந்தியத் தன்மையே இல்லாமல் போகப் போகிறது .
ithelam nadakka kodathu nu vendikiren.... ellathayam vida itha padikum pothu robma kuthuthu

- aruna

Unknown said...

Romba feel panni eluthiagthu pol irruku....very nice....

My wishes and regard....

Keep writing.......


--Rosa