Saturday, August 22, 2009

தெருவோர பிள்ளையார் !

வழக்கமாக சாப்பிடும் இரவு நேர சாலை ஓர தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு முடிக்கையில் , சத்தம் வராமல் விசும்பும் பெண்ணைப் போல மழை ஒழுகத்தொடங்கிருந்தது . சாப்பிட்டதற்கான முப்பது ரூபாயை கொடுத்து , அவன் சில்லறை தேடி மூன்று ரூபாய் எடுத்து தருவதற்குள் துளி சற்று பருத்தும் வேகத்துடனும் விழ ஆரம்பித்தது . நனைந்தாலும் நனைந்து விடுவேன் என்று பயந்து , மழைக்கு மரியாதை தருவதாயும் நினைத்துக்கொண்டு ஒரு மூடியிருந்த கடையின் வாசலில் ஒதுங்கிக்கொண்டேன் . ரோட்டை கடக்கையில் நிறைய சாலையோர கடைகள் அழகழகான குட்டி விநாயகர் சிலைகளை தாங்கி இருந்ததை கண்ட பின்புதான் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்ற நியாபகம் வந்தது . களிமண்ணால் அழகாக செய்யப்பட்டு வண்ணங்கள் பூசிய பிள்ளையார்களை தரையில் வைத்திருந்தார்கள் . வீடுகளுக்கென்று பிரத்யோகமாக செய்யப்பட்டவைபோல் தெரிந்தது . மிகவும் குட்டியாகவும் அழகாகவும் இருந்தது . நூற்றுக்கும் மேல் சிலைகளை கொண்ட கடையில் ஒரு ஆள் நின்றுகொண்டிருந்தான் . நாலைந்து பொடியன்கள் அருகிலிருந்தார்கள்.
வேலை சிறுவர்களாக இருக்கலாம் .

மழை வலுக்க தொடங்கியவுடன் , பக்கத்திலேயே வைத்திருந்த பெரிய பெரிய பாலீத்தீன் கவர்களை வைத்து மூட தொடங்கினார்கள் . என்னருகில் இரண்டு பேர் நின்று கொண்டு ஜருதா சேர்த்த பீடா போட்டுக்கொண்டு கதைத்தபடி இருந்தார்கள் . எனக்கு அந்த ஜருதாவின் வாடை அடி வயிற்றை பிரட்டுவதுபோல் இருந்தது . சற்று தள்ளி நின்று கொண்டேன் . மழையை கிழித்தெரிந்தபடி சாலையில் வண்டிகள் போய் வந்த வண்ணம் இருந்தன . இருசக்கர வண்டிகளில் வந்தவர்கள் அவசரமாய் அங்கங்கே நிறுத்திக் கொண்டார்கள் . மழை இப்போது பெரிதாக ஒப்பாரி வைத்து அழுவதைப் போல கொட்டிக் கொண்டிருந்தது . தூரத்தில் எங்கோ சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சின் சத்தம் மழையில் மெதுவாக மிதந்து , எடையிழந்த காற்றைப்போல் செவிப்பறைகளில் மோதித் திரும்பியது . பிள்ளையார் கடைக்காரன் மட்டும் குடையை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் .

இருபது நிமிட பே மழையில் சாலையின் ஓரங்களில் ஓடைப் போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . எனக்கு முன்னாள் குடை பிடித்து சென்றவன் ஒரு ஐஸ்க்ரீமை முழுங்கிவிட்டு கப்பை அந்த நீரில் எறிந்தான் . கப் தண்ணீரில் மிதந்தபடியே வேகமாக சென்று பிள்ளையார் சிலையில் தட்டி நின்று கொண்டது . அருகில் நின்றிருந்த காவல்காரர் ஜெர்க்கினை எடுத்து போட்டுக்கொண்டார் . நான் இடுப்புயரம் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொண்டேயிருந்தேன் . சில சமயங்களில் , இவர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைவது வீணான காரியமாகவே எனக்கு படும் . ஒருமுறை ஒரு காவல்காரர் சொன்னார் , அதில் பெரும்பாலும் ரவைகள் இருப்பதில்லை என்று . மழைச்சத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது . அந்த பீடா ஆசாமிகள் தூறலில்
நடக்க தொடங்கியிருந்தார்கள் .

இரண்டுக்கும் சற்று அதிகமான நிமிட நேரங்கள் யோசித்து ,நடக்கலாமென்று எத்தனித்த பொது , மழை மீண்டும் அடித்து பெய்ய தொடங்கியிருந்தது . அள்ளி முடிந்துகொண்டு சண்டைக்கு செல்லும் எதிர்வீட்டு அஞ்சலையைப் போல , மழையும் இன்று யாருடனோ தீவிர சண்டையிலிருப்பதாய் பட்டது .மழையின் வேகம் இன்னும் அதிகமாக , பிள்ளையார் போர்த்தியிருந்த பாலீதீன் சால்வை மெல்ல மழைக்கு வழிவிட்டது . அதற்குமுன்பே ஆறாய் ஓடிய மழை நீர் பாதி சிலைகளை கரைத்து விட்டிருந்தது. கடைக்காரன் மழையில் நனைந்து கொண்டே களிமண் சிலைக்களுக்கடியில் தேங்கிய நீருக்கு வடிகால் செய்து கொண்டிருந்தான் .

செவ்வண்ணம் பூசிக்கொண்டு வானம் மழையை ஊற்றிக் கொண்டிருந்தது . எதிர் மருத்துவமனை சன்னலில் பெண் ஒருத்தி மழையையே பார்த்துக்கொண்டிருந்தாள் . கணவனோ அல்லது அம்மாவோ , யாரோ ஒருவர் படுக்கையில் இருக்கலாம் . சிலர் குளிரில் புகைவிட ஆரம்பித்திருந்தார்கள் . காவல்காரர் ஒன்றும் சொல்லவில்லை . சிலைகளை காப்பற்ற முயன்று தோற்றுப்போன கடைக்காரன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து , மழையை வெறித்தபடி இருந்தான் . தீடிரென்று சத்தமாகவே புலம்பினான் . அவனை அதற்குமேல் பார்க்க இயலாமல் , மழையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன் . களிமண் செருப்பில் ஒட்டியிருந்தது .

-ஜெனோவா

2 comments:

Anonymous said...

Jo....Yetharthama iruku...
@ the end i felt a heavy heart...
-Indu

அணையான் said...

kali man seruppil otti irunthathu. what is the meaning Nanba ? I can't understand