அலுவலகத்தில் பதினான்கு மணிநேரம் வேலைப் பார்த்த களைப்பில் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன் . சற்று பதட்டமாக உணர்ந்ததால் பக்கத்திலிருந்த காபி மெஷினில் ஒரு கப் எடுத்துக்கொண்டு , லிப்டில் இறங்கினேன் . கை சிறிதாக நடுங்கியதுபோல் தெரிந்தது . ஏதோ ஒன்று உள்ளிருந்து இதயத்தை வேகமாக அடிக்க செய்தது . நடந்து வாசலுக்கு வந்தேன் , செக்யூரிட்டி வணக்கம் வைத்தான் , ஏதோ பயந்துபோய் காபி கப்பை வீசிவிட்டு வேகமாக நடந்தேன் . நடையின் வேகத்தைவிட இதய அடிப்பின் வேகம் அதிகமாயிருந்ததை என்னால் உணர முடியாமல் இல்லை .
ஏதோ ஓர் இனம் புரியாத , வகை தொகை பிரித்து அறிய முடியாத பயம் ஏறிக் கொண்டது . நல்ல வேளையாய், அதோ ஓர் பேருந்து வருகிறது , என்ன கூட்டம் அதிகமாயில்லை ? ஆமா ராத்திரி பதினோரு மணிக்கு என்னைப் போல சில பேர்வழிகளை தவிர எவன் வருவான் ? மொத்தமே எழு பேர்தான் இருந்தார்கள் , ஏறி அமர்ந்தவுடன்தான் கவனித்தேன் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . பிரமையா? இல்லை இல்லை சர்வநிச்சயமாய் என்னையேதான் விழுங்கினார்கள் .முன்னால் அமர்திருந்தவனின் மீசை அடர்ந்து கனமாயிருந்தது , கோவைப்பழம் போல சிவந்த சாராயக் கண்களைக் கொண்டு ,ஜன்னலோரமாய் ஏதோ புலம்பிக்கொண்டே வந்தான் .
இந்த பேருந்து ஏன் கருமம் இவ்வளவு மெதுவாய் போய் தொலைக்கிறது ? இதற்கிடையில் நடுவில் ஏதோ நிறுத்தத்தில் நின்றது , நாலைந்து பேர் ஏறினார்கள் . பின்னாடி ஒருவன் நின்று கொண்டு பேருந்தை விட சத்தமாய் இருமலை சேர்த்துக் கொண்டு தும்மினான் - எனக்கு இதயம் வெளிவந்தது விடுமோவென பயம் அப்பிக்கொண்டது . இனம் புரியாத எதற்கு என்றே தெரியாத பதட்டம் , பயம் ... என்ன எளவு இது ? ... பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு வந்தான் , அருகில் இடமிருந்ததை காட்டி அமர சொன்னேன் , தவிர்த்துவிட்டான் பரவாயில்லை . இப்போது முன்னால் இருந்த மீசைக்காரன்
மீசையை தடவிக்கொண்டே இந்தியில் ஏதோ கேட்டான் ? எனக்கு இந்தி தெரியாது என்பதைவிட என்ன கேட்டிருப்பான் ? என்றே மனசு சுற்றி சுற்றி வந்தது . மண்டைக்குள் பூரான் நெளிவதை என்னால் உண்மையாகவே இப்போது உணரமுடிந்தது. முன்னாலிருந்தவன் தொண்டையை செருமினான் , நான் முகத்தை திருப்பி பேருந்தின் முன்பக்கமாய் விழித்தேன் .
பேருந்தின் முன்னால் நடு ரோட்டில் ஒரு பால் வண்டிக்காரன் மொபைலில் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தான் , "அறுதலி" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன் . ரோட்டோரம் காளிக்கொவிலில்ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்தது . யாரோ பக்கத்தில் மணி கேட்டார்கள் , வெடுக்கென்று கையை இழுத்து பின் நிதானித்து பதினொன்று இருபது என்றேன் . பேருந்தில் ஏறி இருபது நிமிடந்தான் ஆயிருந்தது ஆனாலும் இரவே கடந்து போனது மாதிரியும் , நான் வேறெங்கோ பயணிப்பது போலவும் தோன்றியது . எது நிஜமாய் நடக்கிறது ? எது நிழலாடுகிறது என்றே புரியவில்லை . மண்டைக்குள் இன்னும் பூரான் நெளிவது நிற்கவில்லை , ஆனால் அது உண்மை என்றே பட்டது.
பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களை கரைத்து என் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன் . "பைத்தியக்காரப்பய" என்று ஓட்டத்திலேயே இறக்கி விட்ட ஓட்டுனரை திட்டிக்கொண்டே அந்த மூத்திர சந்து வழியே நடந்தேன் . இப்படியே நேரே நடந்து இடது பக்கம் திரும்பினால் என் வீடு வந்துவிடும் . அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வந்தது , சந்திலேயே ஒதுங்கிக்கொண்டேன் . பயமெல்லாம் நீர்த்து போய் மூத்திரமாய் போவதாய் கற்பனை கூட்டிக் கொண்டேன், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை .
வீட்டிற்கு இன்னும் யாரும் வந்திருக்கவில்லை , மணி பன்னிரண்டு ஆகப்போவுது எங்கே போய் தொலைந்தான்கள் இவங்கள் ?
முதுகில் ஏதோ சுமையை இப்பொழுதான் தூக்கி வைத்திருப்பது தெரிந்தது . மடிக்கனிணிப் பை . அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது பாதி எழுதிய நிலையிலிருந்த மென்பொருளை மீதியும் முடித்து , நாளைக்கு மீள்ப்பார்வைக்கு வைக்க வேண்டுமென்பது நினைவுக்கு வந்து மறைந்தது . இப்போது மண்டைக்குள் நாலைந்து பூரான்கள் வேகமாய் நெளு, நெளுவென்று நெளிந்தன .
மடிக் கணினிக்குள் நிறைய கரப்பான் பூச்சிகளும் , பல்லிகளும் இருப்பதாகப் பட்டது , அப்படியே அசையாமல் எடுத்துக் கொண்டு போய் முன்னாடி இருந்த வேப்ப மரத்தில் ஓங்கி படீரென்று அடித்து உடைத்துவிட்டு , மேனேஜருக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டேன் " என்னால் இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் வர முடியாதென்று " . பூரான் நெளிவது இப்போது நின்று போயிருந்தது .
-ஜெனோவா
செல்ஃபி
1 month ago
4 comments:
Kadasila....Romba avasarama mudicha mathri iruku....
Narration is in ur style...
its like u r talking b4 me.Nice observation..but final touch sari illa...
Thanks for the abservation Indu,
adutha writing la parru.. mostly tonight.. see you soon
முடிவு நல்லாத்தான் இருக்கு... ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லை !!
:(
என்ன செய்ய ? எப்படியேனும் வாழ்ந்து தான் தீர்க்கவேண்டி இருக்கு .
Post a Comment