Friday, October 30, 2009

வெந்து தணிந்த பாறைகள் !!

ஆர்ப்பரிக்கும் அருவிகளிநூடே ஒரு சிற்றருவி !

நுரைத்து ஓடும் வெள்ளம் !

பிரதான அருவிகள் , கர்நாடக பக்கம் .

பரிசல்கார அண்ணனுக்கு என் பரிசு !! ( அண்ணா வந்து பாருங்க !!)

ஓடு மீன் ஓட --- கொக்கு கூட்டம் !

பிரதான அருவிகள் - தமிழக பக்கம் .

அடுத்த பயணிகள் வருவார்களா ?

நிலவுச் சூரிய அஸ்தமனம் !

பிரதான அருவி - ஒரு தூரப் பார்வை !

பார்த்த உங்களுக்கான பரிசு - எடுத்துக்கோங்க !!

Thursday, October 29, 2009

அழுகி நாறிய வாழ்க்கை !


மாறச்சொன்னது வயது -
விரும்பவில்லை நான் .
மாற்றம் வேண்டுமென்றது காலம் -
அப்புறம் பார்ப்போம் என்றேன்.
வேறு மனிதனாய் மாறி வா என்றது காதல்
தூக்கியெறிந்தேன் காதலை.
வயதும் வழியும் இழந்து
நின்ற கணமொன்றில்
மாறித்தான் பாரேன் என்றது மனது -
தோல்வியைக்கண்டு மாறும்
கோழை நானில்லை என்றேன் நான் .
அலைகளால் அலைகழிக்கப்பட்டு
கரை ஒதுங்கிய பிணமொன்றைப்போல
இக்கணத்தில்
மாற்றத்தின் வீச்சத்தில் நாரிக்கிடக்கிறேன்.
என்னிலைகண்டு
பல்லிளித்த இயற்கைக்கு
நான் இன்னும் மாறவில்லைதான்
மாற்றம்தான்
மாறிவிட்டதென பதிலளிக்கிறேன் .
யாரோ
என்னைப்பார்த்து ஏளனமாய்
பேசி சிரித்து
சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில்.

Monday, October 26, 2009

தாய்க்கோழி



சத்தம் கேட்டு புறக்கடைக்கு ஓடுவதற்குள்
செவலை நிற குஞ்சியை மட்டும்
காகமோ பருந்தோ தூக்கிவிட்டுப் போனதை
கடிதத்தில் எழுதியிருந்தாள் அம்மா.
பறிகொடுத்த ஆத்திரத்திலும்
பயத்திலும் கெக்கரித்து
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தாய்க்கோழியின் கண்கள் மனதில் வந்தன.
இனிமேல்
படியில் தொங்கிக்கொண்டு போகக்கூடாதென
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் .

Tuesday, October 20, 2009

ரெண்டாந்தரம்



கடைசி வார சந்தையில்
வாங்கித்தருவதாய் சொல்வாள் அம்மா .
பொத்தான்கள் இல்லாத
அண்ணனின் பழைய பள்ளிச்சீருடைகள்தான்
எல்லா வருட பள்ளி முதல் நாளிலும் .

பழைய புத்தகத்தில் படித்தால்
நிறைய குறிப்புகள் கிடைக்குமென்பார் அப்பா.
அக்கா படித்துக்கிழித்த பழைய தமிழ் புத்தகத்தில்
கடவுள் வாழ்த்தும் இன்னும் பல செய்யுள்களும்
எப்போதுமே கிழிந்து போயிருக்கும் .

அம்மா தரும் எட்டணாவில்
ஒன்னுக்கு இடைவெளியில் அண்ணனிடம் போனால்
அஞ்சு கல்கோனா முட்டாய்கள் வாங்கி
ரெண்டு மட்டும் தருவான்.
அக்கா பாதிகடித்த புளியங்காய் தருவாள் .

அண்ணன் இந்த வருடம்
கல்லூரி செல்வதாய் கூறி
ஒருவருடம் கடையில் நிக்க சொன்னார் அப்பா .
அக்காவும் படிக்க ஆசைப்பட்டபோது
நான் கடையிலே நின்று விட்டேன் .

மேலத்தெரு செல்வியின்கணவன்
இறந்தது தெரியுமென்றாலும்
காதலிப்பதாய் சொன்னபோது ஒத்துக்கொண்டாள்.
அப்பாதான்
மானத்தை வாங்கிவிட்டதாய் சொல்லி
அடித்து விரட்டிவிட்டார் வீட்டைவிட்டு .

Wednesday, October 14, 2009

சதுரங்க நாயகி


கருப்புக் குதிரையில்
நான் நான்கு கட்டங்கள் தாவுகிறேன்
வெள்ளை யானையில் நீ
வேகமாய் எதிர்பக்கம் கடந்துவிடுகிறாய்
உன் வேகத்தை நிகர்செய்ய முற்பட்டு
கோட்டையை நகர்த்துகிறேன் உன் பக்கமாய்
மறைந்திருந்த உன் வெள்ளை குதிரைகளுள் ஒன்று
கோட்டையை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுகிறது
தற்காப்பு ஆட்டமுறையாக
வெறும் சிப்பாய்களை மட்டும்
ஒவ்வொரு கட்டமாய் நகர்த்திவைக்கிறேன்
எதிர்பார்க்காத ஒரு கணத்தில்
இன்னும் நான்கு நகர்த்துதலில் ஆட்டம் முடியும் , என்கிறாய் நீ .
காய்களை இழக்காமல் தோற்கடிப்பதெப்படி என்ற
உன் சதுரங்க தந்திரங்களை அறியாமலே
தோற்றும் போகிறேன் நான் .