Wednesday, January 5, 2011

நாடகம் !

எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,

நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,

திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறுவேடமிட்டு
பதுங்கியும் ,

எல்லாம் விடுத்து நாயாகவே ஆனபின்பும் ,

அணிலை கோட்டைவிட்டது
கடைசிவரையில்
அணிலாக நடிக்கத் தெரியாத நாய் !

Friday, December 31, 2010

ரசம் இழந்த முகம் !

எல்லா நிகழ்வுகளுக்கும்
ஒரே மாதிரியான
முகபாவங்கள் காட்டுவதை
இப்போதே நிறுத்திவிடுங்கள் .

பழிதீர்க்கப் பட்டவனின்
சாவுக்கு செல்கையிலும்
ஒரு துளி ஊமை கண்ணீருக்காய்
பிராத்தியுங்கள் .

இறந்தவன் உற்ற நண்பனெனில்
பலூனுடைந்த கணத்தில்
அழும் சிறுமியைப்போல
வெடித்தழுது கூச்சலிடுங்கள் .

தூரத்து உறவினரின் திருமணத்திற்கு
ஒரு மலரைப்போல மென்புன்னகை
நெருங்கிய சொந்தமெனில்
காற்றிலாடும் நாணலாய் மகிழ்ச்சி முகம் .

ஒரு உயிரின் பிறப்பை
புருவமுயர்த்தி வரவேற்கலாம்

ஒரு துரோகத்தின் நாளை
தூக்க முகத்தோடு கழிக்கலாம்

ஒரு வெற்றியின்போது
அமைதியை தழுவ விடுங்கள்

ஒரு தோல்வியை
நம்பிக்கை கண்களோடு எதிர்கொள்ளுங்கள்

இவையெல்லாம் தாண்டி

நீங்களும்
ஒரு காதல் முறிவை சந்திக்க நேர்ந்தால் .
அழுது புரண்டுகொண்டிருக்காமல்
ஜன்னல் கம்பியிலிருக்கும் ஒரு சிட்டுக்குருவியையோ
நின்று போய் கிடக்கும் பழைய கடிகாரத்தையோ பார்த்தபடி
யாருக்கும் முகம் கொடுக்காமல்
கடந்துவிடுங்கள் .

Wednesday, December 29, 2010

நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !

வெட்டாந்தரையிலோடும்
கரும்புள்ளி வண்டிற்க்கொப்பான
மனநிலையில்
நான்.

மிக எளிதாய் கடந்துவந்ததாய்
நினைத்துக்கொண்டிருக்கும் வெறுமையின்
நாட்களை
இந்த சிற்றெரும்பை பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன் .

துர்கனவுகளுக்கு பயந்து
தூங்காமல் கிடந்த ராத்திரிகளின் வாசனை
இங்குதான் ஏதேனும் ஒரு
மரத்தினடியில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் .

மனம் தெளிந்த இக்கணத்தில் ...

பெயர்தெரியாத ஒரு செடி
துளிர்க்க ஆரம்பிக்கிறது .

தகித்து கொண்டிருந்த வெயிலை
சுகித்துப் பார்க்கிறது மழைக்கு முந்திய தென்றல் .

மஞ்சள் நிறத்தில் கடலைக்காடுகள்
பூத்த வண்ணம் இருக்கின்றன .

ஒரு சிகப்பு நிற பட்டுப்பூச்சி
என் பாதைக்கு குறுக்காய் செல்கிறது .

மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !

Thursday, August 26, 2010

பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

பறவையிடமிருந்து
பிரிந்த கதை தெரியாமல் இன்னும்
பறந்தபடியே இருக்கிறது
இந்த இறகு
தள்ளாடி ...தள்ளாடி
தரையை முட்டும் பொழுதில்
அவசரமாய் நான் செய்த
மூச்சுக்காற்றின் மீதேறி பறந்து
மறைந்த அது
உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள் - முடிந்தால்
ஒரு காற்றை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

Thursday, August 19, 2010

பொழப்பு ...

செல்வி உன்ன கருவாயனு சொல்லிட்டாடா
செம சண்ட
நல்லா திட்டிட்டு வந்திட்டேன்
நீ கலரா இல்லானாலும் களையா இருக்கடா
இதே எனக்கு போதும்
உனக்கு என்ன புடிச்சிருக்காடா ? நான் அழகா இருக்கேனா?
கல்யாணம் பண்ணிக்கலாம்டா
நா வேலைக்கெல்லாம் போகமாட்டேன்
எங்க அப்பாகிட்ட போய் பேசுறியா ? ஆனா நான் வரமாட்டேன் .. சரியா ?
ஏஏய்.. என்ன எல்லாத்துக்கும் ஒரு இளிப்புதானாடா ?

எல்லாத்துக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருந்தது !


அவன் என்ன மறக்க ரொம்ப கஷ்டபடராண்ணா...
என்ன கருமத்துக்காம் ??
இது காதல் ணா.. காதல் ...


இதுக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருக்கிறது !
அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது .

Tuesday, August 17, 2010

கூரைகளில்லா சுற்றுச்சுவர்
என் வீடு
கலைந்து கிடக்கும் வார்த்தைகள்
என் கவிதை
களைந்து கிடக்கும் உணர்வுகள்
என் நிர்வாணம்
வரையறுக்கவியலா வானம்
என் வாழ்க்கை
கொள்ளிலடங்கா வெற்றிடம்
என் காதல்

Friday, July 2, 2010

சிலந்தி வரைந்த சித்திரம் !

ஒட்டடை அடர்ந்திருந்த வளவுக்குள் இருந்த
தாத்தா காலத்து கற்தூண்களுக்கிடையே அந்தரத்தில்
வெகுநாட்களாய் தொங்கியபடி இருந்தது
சிலந்தி வரைந்த சித்திரம்
சித்திரத்தின் ஆதாரமுனைகள்
திடமற்றதென்பது அறிந்ததுதான்
ஏற்கனவே தெரிந்திருந்தாலும்
இழப்பு என்பது இழப்புதானே ?
சித்திரம் சிதிலமடைய ,
சிலந்தி
ஓடத் தொடங்கியது
எங்கோ சென்று ,எதையோ பற்றிக்கொண்டு
புதிதாய் ஒன்றை சார்ந்துகொண்டு
வாழ்ந்துதானே ஆகும் ? ஆனால்
விரட்டப்பட்ட
இதே இடத்திற்கே திரும்பவும்
வருமென்பது சந்தேகம்தான் .