Sunday, January 31, 2010

ஒரு தற்கொலைக்கான காரணம்!

உங்களை கொலை செய்ய
ஒரு திட்டம் தயாராக இருந்தது
நெருங்கி பழகியாகிவிட்டது
நம்பிக்கையும் வரச்செய்தாகிவிட்டது
துரோகத்திர்க்கேற்ப
விலையும் கொண்டாகிவிட்டது
போட்ட திட்டத்தின்படியே
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த
ஓர் அந்திவேளையில்
குருதிவழிய கொலை செய்யப் படுகிறீர்கள்
தாங்கவியலா வலியின் வாய்
ஏதோ முனங்குகிறது.சில நிமிடங்கள்.
புன்னகைத்துக் கொண்டே போய்விடுகிறீர்கள் நீங்கள்
பின் நிகழவிருக்கும்
ஒரு தற்கொலைக்கான காரணத்தை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு .

Wednesday, January 27, 2010

ஒழுங்கற்றவனின் சலனங்கள் !

'எப்படி இருக்கிறாய் ?' என பெயரில்லாமல் மொட்டையாய் வெறும் எண்ணோடு வந்த குறுஞ்செய்தியை பார்த்தபொழுதில் அலுவலக வேலை முடிந்து பேருந்து வெளி கிளம்பிக் கொண்டிருந்தது . யாராக இருக்கும் ? என முதலில் யோசிக்கப் பயப்பட்டாலும் , பின்பு யோசித்து மீண்டும் குறுஞ்செய்தி வந்திருந்த அழை எண் பார்த்தேன். குறுஞ்செய்தியில் வந்து அன்னியமாய் தோன்றி நலம் விசாரிக்கும் நபர்களின் தொடர்புகளறுந்து வெகு நாட்கள் ஆகி விட்ட படியாலும் , தொடர்பிலிருக்கும் நண்பர்கள் குறுஞ்செய்தியில் நலம் விசாரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் , யாரோ யாருக்கோ அனுப்பிய செய்தி அழை எண் மாறி தவறுதலாய் எனக்கு வந்திருக்கும் என உத்தேசித்து ஒதுக்கிய கணத்தில் புதிதாக ஒரு குற்ற உணர்வு எனக்குள் தொற்றிக்கொண்ட்து. அன்னியமாய் பழகி இருந்தாலும் ,கல்லூரியில் இருந்தபோது பேசி சிரித்து சுற்றிக்கொண்டிருந்த அந்த மூன்றாம் நிலை நபர்களெல்லாம் என்னவானார்கள் என யோசிக்க வைத்த்து இந்த குற்ற உணர்வு.

மூன்றாம் நிலையிலான அல்லது நண்பன் என்ற வட்டத்திற்க்கு அடுத்த வெளி வட்டத்திலிருந்தாலும் அனைவரும் நன்றாகத்தான் பேசினார்கள்.ஒரு சிலரைத் தவிர வேறு யாராலும் நான் ஒதுக்க படவில்லை.ஒதுங்கிக்கொண்டேன். கொடியசைத்து, விசிலூதி ஓட்டம் ஆரம்பமானது.விசித்திரமான ஓட்டப்பந்தையம் . அவர்களால்தான் நிறைய ஓடினேன். நிறைய பேரைத் தாண்டியும் – தாண்டலும் தாண்டல் நிமித்தமுமேயான ஓட்டங்கள்.முன்னிருக்கும் வெளிகளைச் சுருக்கி இடைவெளி குறைப்பதற்கான ஓட்டம். விசித்திரமான பந்தையம்தான் அது. வகுப்பறையில் ஒருத்தியை காதலிக்கிறேன் என்று தெரிந்த மாத்திரத்தில், தகுதி அடிப்படையில் போட்டியிலிருந்து விலக்கி விட்டார்கள்.இப்போது அந்தக் காதல் முறிந்து விட்ட்தென தெரிந்தால் மறுபடியும் சேர்த்துக் கொள்வார்களோ ? என்னவோ? யார் கண்டது. காதல் என்றதும் என்ன காரணத்தினாலோ களிப்படைந்த சிலர், 'முறிவு' என்றதும் முகம் சுளித்தார்கள். இந்த முறை விலக்குவதற்கு முன்னர் நானே முந்திக்கொண்டு விலகி விட்டேன்.இலக்கு தெரியாமல் தலை தெறிக்க ஓடும் முயல் கூட்டத்திலிருந்து விலகி, ஆமைகளின் கூட்டத்தில் ஆமைகளுக்குள் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டு பின்பு என்னவென்றே தெரியாத ஒரு நிலைக்கு தள்ளபட்டு தனியாக இருப்பதே உத்தமம் என மாறிவிட்டது. இரு அணியினருக்குமே தலா ஒரு வெற்றிப் புள்ளி வழங்கும் புத்திசாலி விதிகள், வாழ்க்கையில் வாய்ப்பது மிக அபூர்வம். நிர்பந்திக்கும் போதும் , நிர்பந்திக்கப்படும் போதும் ஏதாவது ஒரு கணத்தில் ஒரு பக்கம் மட்டுமே வெற்றி என்பதே வாழ்க்கையின் கணக்கு அல்லது விதி.

நினைவுகளின் நேர்க்கோட்டில் பயணிக்க இயலாமல், பேரூந்தின் ஒலிப்பான் கவனத்தை திசைமாற்றியது. ஆட்டோவில் அருகருகே நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கிளர்ந்தெழும் பழைய நியாபகங்கள், எதையோ உடையென்று அணிந்து சிக்னல் கடந்து செல்லும் இந்த யுவதியை பார்க்கும் பொழுது மறைந்து மாயையாகின்றன. கடந்து சென்றவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிவப்பாயிருந்த விளக்கின் ஓளி பச்சைக்குத் தாவுகின்றது. நகரத் துவங்கிய சில நிமிடங்களிலேயே, நடைபாதையில் செருப்பு தைத்து கொண்டிருப்பவனுக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் பிஞ்சு முகம் அலைக்கழிக்கிறது என்னை. இருட்டிக் கொண்டிருக்கும் இந்நேரம் வரையில் யாருக்கு இந்த செருப்பை தைத்துக் கொண்டிருக்கிறான்? தினமும் இப்படித்தானா? ஒருவேளை இவனிக்கு மனைவி இல்லையோ ? அப்படியானால் குழந்தை ஏன் இங்கேயே உறங்க வேண்டும் ? நாளைக்கு இதுவும் வளர்ந்து செருப்புதான் தைக்குமா? அல்லது தைக்க நிர்பந்திக்கப் படுமா ? விதவிதமாய் முளைத்த கேள்விகளுக்கு பதில் தேடி குழப்பங்களுக்குள் தொலைந்து மீண்டும் சம நிலைக்கு வர முற்படுகிறேன். பாரதியின் ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எனக்குள் இருக்கும் இன்னொருவன் முன் இருக்கையில் குத்தினான். எதிர்பக்க இருக்கையிலிருந்த பெண் ஏதோ ஒரு வேற்றுக் கிரகவாசியைப் போல என்னை பார்த்தாள். பிறகு குறுநகை புரிந்தாள். என் செய்கை அவள் கடைசியாய் பார்த்த கோமாளியை நினைவு படுத்தியிருக்க வேண்டும் அல்லது முற்றிக்கொண்டிருக்கும் ஒரு பித்து பிடித்தவன் என நினைத்திருக்க வேண்டும்.இப்படித்தான் முந்தா நாள் ராணி ஒயின்சின் முன்னால் நின்று மதுவருந்தும் போது கூட நண்பன் சொன்னான், நான் முன்பு போல் இல்லையாம். ஏன் அப்படி என்று கேட்கும் முன்பே, நான் முன்பு போல் பேசுவதில்லை என ஆரம்பித்தவன் , நடை,உடை,சிரிப்பு, நண்பர்கள், பெண்கள் என என்னவெல்லாமோ பேசி கடைசியில் பித்து முற்றிவிட்ட்தாக கூறி முற்று வைத்தான்.இதுவும் வசதிதான். இந்த நிலை. கிட்டதட்ட மனம் பிணக்குற்ற ஒரு நிலை – வசதியான நிலை. யாராவது முறைத்தால் சிரிப்பு வரும்.சிரிக்க வேண்டிய சில பொழுதுகளில் எதற்கு என்று கேள்வி எழும்.கேள்விகளைப் பற்றி சிந்திக்கும் முன்னர் போன வாரத்தில் பார்த்த படத்தின் தற்கொலை காட்சி ஏதாவது நினைவில் வரலாம் அல்லது முற்றிலும் வேறுபட்ட புதிதாக ஒரு காட்சி தோன்றலாம். ஆக, எதையுமே முழுதாக யோசித்துக் கோபப்படவும் இயலாது ஆனந்தப்படவும் முடியாது.அப்படியொரு நிலையில்லாத நிலை – வசதியான நிலை.

நிலையற்ற நிலையிலிருந்து கொண்டே, இன்னும் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாளா? என பார்த்தேன். நல்ல வேளை, பார்ப்பதை நிறுத்தி அலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்திருந்தாள். பல ஆயிரங்கள் ஆயிருக்கும் போல, அலைபேசி பளபளவென்று இருந்தது. அனிச்சையாய் கையிலிருந்த என் அலைபேசியை பார்த்தேன்,பின்பு அவளைப் பார்த்தேன். அவளும் இதையே செய்தாள்.கைபேசியை பார்த்துவிட்டு பின், ஒரு சிறு எறும்பை பார்ப்பது போல அற்பமாய் பார்த்தாள் (ஒருவேளை என் மனநிலை அலைகழிக்கப் பட்டிருந்ததால் அவளின் பார்வை எனக்கு அற்பமாய் தோன்றியிருக்கலாம் ). உங்களைப் போல ஒரே அள்ளலில் ஒரு கைப்பிடி சோறு வேண்டாம், ஒரே ஓர் ஒற்றைப் பருக்கை போதும் ஏனெனில் இப்பொழுதுதான் எறும்பாகி ஊர ஆரம்பித்திருக்கிறேன். முதலில் எறும்பாய் வாழ்ந்து, எறும்பான பிறகும் மீதி நேரமிருந்தால் நீங்களே வந்து மனிதனாக வாழக் கற்றுத்தாருஙகள்,என நினைத்துக்கொண்டெ வெளியில் பார்த்தேன். நான் இறங்கும் இடம் இன்னும் வரவில்லை, இருந்தாலும் இங்கு இறங்குவதுதான் சரியென்று முடிவு செய்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

Monday, January 25, 2010

மரமாகி நின்ற மரம் !

பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும்
இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு
உச்சிக்கிளையில் தரையென இறங்கி
பின் கிளையென உணர்ந்து
தரைதொட கிளை படரும்
மழை நீருக்கு
மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு
வண்ணங்கள் பிடிபடாமல்
பாளங்கள் பிளந்த மரப்பட்டையின்
உள்ளிருந்து எட்டிபார்க்கும்
கெவுளிக்கு
ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என
எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது
இந்த மரம் வீட்டுவாசலில் !

Monday, January 18, 2010

இப்படியாய் இன்று !

தெரியாத்தனமாகப் பட்டு விட்டதென்ற
முக பாவத்தோடு அமர்ந்திருந்த
பின் இருக்கைக்காரனைப் பார்த்து
ஒரு முறைப்பு மட்டும் முறைத்துவிட்டு,
பளாரென அறை
கூச்சல் போட்டு கூட்டம்
கையிலேடுத்தச் செருப்பு என
எந்த அபாயநிலை
மந்திரத்தையும் பிரயோகிக்காமல்
புத்திசாலி பெண்
கால்களை மட்டும்
முன்நகர்த்தி வைத்துக்கொண்டாள்.
வாக்குவாதம்
கைகலப்பு
காவல் நிலையம் என
வழக்கமாய் வந்துசேரும் எதுவும் வராமல்
சுவாரஸ்யமற்று
நெரிசலோடு சென்றுகொண்டிருக்கிறது இன்றைய
அலுவல் நேர காலைப் பேருந்து !

Thursday, January 14, 2010

நன்றி விகடன் !

பச்சிளம் பொழுதுகள்!
-------------------

ஆளாளுக்கு முன்னால் வந்து
ஆச்சர்யம் காட்டியும்
சிரிப்பு மூட்டியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில்
ஊர்ந்துகொண்டிருந்த கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது
குழந்தை !

(இந்த வார விகடன் )

Monday, January 11, 2010

கனவான்களின் பெருவீதி !

வயிறு பெருத்தலையும் கனவான்களின்
வீடிருக்கும் வீதியொன்றில்
நடக்க நேரிட்டபோது
ஆச்சர்யம் விலகாமல் அடுக்குமாடிகளை
பார்த்துக்கொண்டிருந்தேன்
அகலமான தெருவின் மீது
கருப்பு வண்ணத்தில் தார் பூசப்பட்டிருந்தது
தார் பூச்சின் ஓரங்களில் அவரவர்க்குப்
பிடித்தவண்ணத்தில் குறைந்தப்பட்சம்
ஒரு சீரூந்தாவது நின்றிருந்தது
மடிப்புக் கலையாத உடையில்
பாட்டுக்கேட்டபடி
நடை பயிற்சியிலிருந்தார் ஒருவர்
கருப்பு கழுத்துப் பட்டை அணிந்த
நாயை கையில் பிடித்தபடி
அருகில் ஒரு பெண்ணும் இருந்தாள்
சிவப்பு பூக்கள் பூத்திருந்த
மரத்தினடியில் ஒரு
பணக்கார குப்பைத்தொட்டி வீங்கியிருந்தது .
சுற்றுச்சுவர் வாசலில்களில் தவறாமல்
தொங்கிய அஞ்சல் சேகரிப்புப் பெட்டியும்
நாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பும் என்னை
சற்று தள்ளி நடக்க வைத்தது
அம்மன் கோவில் தீமிதிப்பு மாதிரி
பட்டும் படாமலே நடந்து
கார்கள் , நாய்கள்
பெண்கள் , வீடுகள் எல்லாம் பார்த்து
பிரம்மித்து தெருவின் முனையைத்
தொட்டபோது
உதடோடு உதடுவைத்து ஒரு ஜோடி
முத்தமிட்டுக்கொண்டிருந்தது அந்த
அதிகாலையில் !

Friday, January 8, 2010

சுயம் மறந்து ...

வளைந்தும்
பாம்பு போல அசைந்தும்
சிற்றலைகளிநூடே
ஆடிக்கொண்டிருந்தது பனைமரம்
அரவமற்று
அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது
ஓடை !

Monday, January 4, 2010

கற்பனையில் ஒரு மிருகம் !

உறக்கத்தில்
ஆளை விழுங்கிவிடும்
அபூர்வ மிருகமொன்று நகருக்குள்
அலைகிறதாம் .
பதிலாவது குறுக்குத்தெருவில்
ரெண்டுபேரும் ,
அடுத்தத் தெருவில் ஒரு
கூலித்தொழிலாளியும் ,
நேற்று இரவில் கடிபட்டார்கள்
என்கிறார்கள் .
மாயை போன்று வருவதும்
போவதும் தெரியாமல்
தூங்கினால் மட்டுமே வருமந்த
மிருகம் கடித்து
உயிர்பிழைத்தவர்கள் பிற்காலத்தில்
பெரிய ஆட்களாகவும் ஆக
வாய்ப்புகள் நிறைய உண்டாம் .
நான்
தூங்குவதுபோல நடிக்கப்போகிறேன்,
கடிபட்டவுடன் மிருகத்தை
ஏமாற்றிவிட்டு சட்டென்று எழுந்து ஓட
வசதியாக இருக்கும் !

Sunday, January 3, 2010

மாற்று யோசனை !

மீதிச் சில்லறையாக
பழைய
ஐந்து ரூபாயை தரப்பார்த்தார் .
ரொம்பவும் கிழிந்த
நோட்டை வாங்க மனசில்லாமல் ,
என்ன செய்வதென்று
யோசித்து
பின்
இன்னொரு
சிகரெட் பிடிக்கவேண்டியதாய்ப்
போயிற்று !

( 2009 இன் கடைசி பிரதி ஆனந்த விகடனில் வெளிவந்த என்கவிதை இது )