Friday, December 31, 2010

ரசம் இழந்த முகம் !

எல்லா நிகழ்வுகளுக்கும்
ஒரே மாதிரியான
முகபாவங்கள் காட்டுவதை
இப்போதே நிறுத்திவிடுங்கள் .

பழிதீர்க்கப் பட்டவனின்
சாவுக்கு செல்கையிலும்
ஒரு துளி ஊமை கண்ணீருக்காய்
பிராத்தியுங்கள் .

இறந்தவன் உற்ற நண்பனெனில்
பலூனுடைந்த கணத்தில்
அழும் சிறுமியைப்போல
வெடித்தழுது கூச்சலிடுங்கள் .

தூரத்து உறவினரின் திருமணத்திற்கு
ஒரு மலரைப்போல மென்புன்னகை
நெருங்கிய சொந்தமெனில்
காற்றிலாடும் நாணலாய் மகிழ்ச்சி முகம் .

ஒரு உயிரின் பிறப்பை
புருவமுயர்த்தி வரவேற்கலாம்

ஒரு துரோகத்தின் நாளை
தூக்க முகத்தோடு கழிக்கலாம்

ஒரு வெற்றியின்போது
அமைதியை தழுவ விடுங்கள்

ஒரு தோல்வியை
நம்பிக்கை கண்களோடு எதிர்கொள்ளுங்கள்

இவையெல்லாம் தாண்டி

நீங்களும்
ஒரு காதல் முறிவை சந்திக்க நேர்ந்தால் .
அழுது புரண்டுகொண்டிருக்காமல்
ஜன்னல் கம்பியிலிருக்கும் ஒரு சிட்டுக்குருவியையோ
நின்று போய் கிடக்கும் பழைய கடிகாரத்தையோ பார்த்தபடி
யாருக்கும் முகம் கொடுக்காமல்
கடந்துவிடுங்கள் .

Wednesday, December 29, 2010

நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !

வெட்டாந்தரையிலோடும்
கரும்புள்ளி வண்டிற்க்கொப்பான
மனநிலையில்
நான்.

மிக எளிதாய் கடந்துவந்ததாய்
நினைத்துக்கொண்டிருக்கும் வெறுமையின்
நாட்களை
இந்த சிற்றெரும்பை பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன் .

துர்கனவுகளுக்கு பயந்து
தூங்காமல் கிடந்த ராத்திரிகளின் வாசனை
இங்குதான் ஏதேனும் ஒரு
மரத்தினடியில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் .

மனம் தெளிந்த இக்கணத்தில் ...

பெயர்தெரியாத ஒரு செடி
துளிர்க்க ஆரம்பிக்கிறது .

தகித்து கொண்டிருந்த வெயிலை
சுகித்துப் பார்க்கிறது மழைக்கு முந்திய தென்றல் .

மஞ்சள் நிறத்தில் கடலைக்காடுகள்
பூத்த வண்ணம் இருக்கின்றன .

ஒரு சிகப்பு நிற பட்டுப்பூச்சி
என் பாதைக்கு குறுக்காய் செல்கிறது .

மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !

Thursday, August 26, 2010

பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

பறவையிடமிருந்து
பிரிந்த கதை தெரியாமல் இன்னும்
பறந்தபடியே இருக்கிறது
இந்த இறகு
தள்ளாடி ...தள்ளாடி
தரையை முட்டும் பொழுதில்
அவசரமாய் நான் செய்த
மூச்சுக்காற்றின் மீதேறி பறந்து
மறைந்த அது
உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள் - முடிந்தால்
ஒரு காற்றை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

Thursday, August 19, 2010

பொழப்பு ...

செல்வி உன்ன கருவாயனு சொல்லிட்டாடா
செம சண்ட
நல்லா திட்டிட்டு வந்திட்டேன்
நீ கலரா இல்லானாலும் களையா இருக்கடா
இதே எனக்கு போதும்
உனக்கு என்ன புடிச்சிருக்காடா ? நான் அழகா இருக்கேனா?
கல்யாணம் பண்ணிக்கலாம்டா
நா வேலைக்கெல்லாம் போகமாட்டேன்
எங்க அப்பாகிட்ட போய் பேசுறியா ? ஆனா நான் வரமாட்டேன் .. சரியா ?
ஏஏய்.. என்ன எல்லாத்துக்கும் ஒரு இளிப்புதானாடா ?

எல்லாத்துக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருந்தது !


அவன் என்ன மறக்க ரொம்ப கஷ்டபடராண்ணா...
என்ன கருமத்துக்காம் ??
இது காதல் ணா.. காதல் ...


இதுக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருக்கிறது !
அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது .

Tuesday, August 17, 2010

கூரைகளில்லா சுற்றுச்சுவர்
என் வீடு
கலைந்து கிடக்கும் வார்த்தைகள்
என் கவிதை
களைந்து கிடக்கும் உணர்வுகள்
என் நிர்வாணம்
வரையறுக்கவியலா வானம்
என் வாழ்க்கை
கொள்ளிலடங்கா வெற்றிடம்
என் காதல்

Friday, July 2, 2010

சிலந்தி வரைந்த சித்திரம் !

ஒட்டடை அடர்ந்திருந்த வளவுக்குள் இருந்த
தாத்தா காலத்து கற்தூண்களுக்கிடையே அந்தரத்தில்
வெகுநாட்களாய் தொங்கியபடி இருந்தது
சிலந்தி வரைந்த சித்திரம்
சித்திரத்தின் ஆதாரமுனைகள்
திடமற்றதென்பது அறிந்ததுதான்
ஏற்கனவே தெரிந்திருந்தாலும்
இழப்பு என்பது இழப்புதானே ?
சித்திரம் சிதிலமடைய ,
சிலந்தி
ஓடத் தொடங்கியது
எங்கோ சென்று ,எதையோ பற்றிக்கொண்டு
புதிதாய் ஒன்றை சார்ந்துகொண்டு
வாழ்ந்துதானே ஆகும் ? ஆனால்
விரட்டப்பட்ட
இதே இடத்திற்கே திரும்பவும்
வருமென்பது சந்தேகம்தான் .

Tuesday, June 22, 2010

வெள்ளி உருவிய தடம் !




உறக்கம் வராத
இராத்திரிகளில்
நட்சத்திரங்கள் ரசிப்பது
என் வழக்கம்

கொட்ட கொட்ட விழித்திருக்கும்
வெள்ளிகளுக்கு நடுவே
ஒரு வெள்ளி உருவி ஓடுகிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உருவியோடும் வெள்ளிகளை
பார்த்துக்கொண்டிருப்பதால்
மறதி வாய்க்குமென்பதில்
இனி நம்பிக்கையில்லை

வெள்ளியொன்று உருவிச் செல்கிறது
பறவையொன்றும் படபடத்து பறக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சட்டென உன்நியாபகமும் வருகிறது !

Friday, June 18, 2010

முற்றுபெறாதவை...



அகாலத்தில்
ஒற்றையாக குரைத்துக்கொண்டிருக்கும்
தெருநாயொன்றின் மீதேறி நகர்கிறது
விழித்திருப்பவனின் இரவு .

அணைந்த விளக்கிலிருந்து
மேலெழும் கரும்புகை
முற்றுபெற்ற துரோகத்தின் நாளொன்றை
நினைவுபடுத்துகிறது .

தொடங்கப்போகும்
பழிதீர்த்தலின் நாளை
ஊதித்தள்ளும் சிகரெட்டின் வெண்புகை
தீர்மானிக்கிறது .

திட்டம்தீட்டும் இரவுகள்
நீளமானவை
முற்றும்பெறாதவை....

Monday, June 14, 2010

மறக்கும் நோக்கில் !




பொழுதுக்கு ஒன்றாய்
விழுங்கும் மாத்திரைகளை போல இருக்கிறது
உன்னை மறப்பதற்கு
நீ கற்றுத்தரும் வித்தைகள் .

கெட்ட கனவாக நினைத்து
நீ சொன்னதுபோலவே
கனவுகளை சாகடித்துவிடுவேன்
நினைவுகளை என்ன செய்ய ?

காதலின் வீரியத்திலிருந்து
விளைந்த மரம்
முன்னெப்போதுமில்லாத அளவிற்கு
மௌனத்தின் விதையாகிறது.

மறந்துவிடும் நோக்கில்
எங்கெல்லாமோ சுத்துகிறது உடல்
நிழல் நீ என்பதை
மறந்துவிட்டு .

பீறிடும் அழுகையை
குமுறிடும் நெஞ்சை
பிரிந்திடும் உன்னை
என்னசெய்வதென்று தெரியவில்லை

"பெருவாழ்வு வாழ்வாய்" என
வாழ்த்தி செல்கிறாய் - சென்று வா
தண்ணீருக்குள் வளர்ந்தாலும்
பட்டமரம்தான் இனிமேல் நான் .

Friday, May 28, 2010

இவனும் இவளும் !



இவனும் இவளும்
ஒன்றாக படித்தார்கள்
ஒன்றாக வேலை பார்த்தார்கள்
ஒன்றாக காதலிக்கவும் செய்து
கல்யாணமும் செய்துகொண்டார்கள்
அதன்பிறகு
ஒன்றாகவே முடிவெடுத்து
பிரிந்தும் கொண்டார்கள் !

Tuesday, May 25, 2010

மழையுடன் கூடிய அந்தியும் , ஐஸ்கீரீம் சிறுமியும் !



ஐஸ்கீரீம் கேட்டு
அடம்பிடித்தழும் சிறுமியை
ஆர்வமாய் பார்க்கிறாள்
ஐஸ்கீரீம் விற்கும் சிறுமி !

-----------------------------------------

சரிதான்
இன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது
இனிவரும் நாட்களில் இவள்
தணலில் சுட்ட மக்கா சோளமோ ,
வெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்
பருவங்கள் மாறும் காலங்களில்
வியாபாரத்தை மட்டுந்தான்
மாற்றமுடிகிறது !

-----------------------------------------

இந்த பூங்காவினுள்
"பதினெட்டு வயதிற்கு கீழுள்ளோர்
அனுமதி இல்லை" என
அறிவிப்பு பலகை வைத்துவிடுங்கள்
குறைந்தபட்சம்
இவர்கள் வியாபாரிகளாகவாவது
மாறாமலிருக்கக்கூடும்!

Wednesday, May 19, 2010

நான் தோல்வியின் சித்திரம் !

ஒவ்வொரு முறை
வெற்றியை அணிந்துகொள்ளும்போதும்
தோல்வி
நிர்வாணப் படுத்தப்படுகிறது .

தோல்வியின்
கைவிரல்களுக்குள் சிக்காமல்
ஒரு சிறு பறவையாய்
வானேறி பறக்க தயாராகிறான்
வெற்றியாளன் .

அணிந்துகொள்ளப்பட்டு பின்
அவிழ்த்தெரியப் படும்போதுமுள்ள வலி
அதனதற்கு உண்டென்ற வகையில்
இப்போது
எனக்கும் உண்டு வலி !

Friday, May 7, 2010

உஷ்ணம் குழைத்த பிரியம் !

தீர்ந்த மழையில்
உடல் விறைத்து நிற்கும்
குல்முகர் பூக்களின் மரத்தினடியில்
ஒரு கோடைகாலத்தின்
வெம்மையோடு
தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

தனிமைகள்
பெரும்பாலும் உஷ்ணமாயிருக்கின்றன
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது .

காற்றில் மிதந்து வரும்
தனிமையின் இசை
ஒரு பஞ்சு மேகத்தைப்போல
எனைத் தொட்டு தடவி
பின்
வழிந்து வேறோரிடம் செல்கிறது .

அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .

கடைசியில்
காற்றோடு கதைபேசிக்கொண்டே வந்த
குல்முகர் பூவொன்று
கலைத்துச் சென்றதென் வெறுமையை
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை !

Wednesday, May 5, 2010

எதிரெதிர் !

வரம் வாங்கி
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .

வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !

Sunday, May 2, 2010

அடிமைகளின் முகங்கள்!

பரபரப்பாய் இயங்கும் நகரவீதியின்
ஏதாவது ஒரு சந்தில்
ஒரு கும்பல் எப்பொழுதும்
பஞ்சாயத்து செய்து
பிழைக்கிறது

செய்யாதவற்றையெல்லாம்
செய்ததாக ஒப்புக்கொண்டு
அடிவாங்கும்
ஒர் அப்பாவியும் எப்படியாவது
கண்ணில் படுகிறான்

இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்

உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.

Monday, April 26, 2010

நாலே நாலு நாள் !

"நாலு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கப்பா " என்று
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .

நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .

நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !

Friday, April 23, 2010

ஒளி மூடிய உன் இரவு !

அணிந்திருந்த
முத்துக்களைஎல்லாம் விசிறிஎறிந்து
மூளியாய் நிற்கிறாய்
போர்த்தியிருந்த
மேலாடையையாவது வைத்திருக்கலாம்
அதையும் அவிழ்த்தெறிந்து
அரை நிர்வாண அழகியாய்
சலனப் படுத்துகிறாய்
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
அரை நிர்வாண நிலையில் நீ
ஒளி மூடிய உன் இரவு
வேறென்ன வேண்டும் நான்
மோகம் கொள்ள !

Monday, April 19, 2010

'மில்லி 'யால் கொள்ளி

சுள்ளி பொறுக்க போன
செல்வி அக்காவுக்கு
கருவேலங் காட்டுக்குள்ளையே பொறந்தான்
மொத பையன்.

மூக்கு சீந்திவிடக்கூட ஆளில்லாம
சீள்பட்ட செல்விக்கென்று
தெனந்தெனம் ராத்திரி மட்டுந்தான்
ஒத்த ஆளு துணையுண்டு .

துணையாம் துணை
காபிக் குடிச்சாலே சண்டைக்குப் போகும்
கசவாளிப் பய
கண்ட கருமத்த குடிச்சா என்ன செய்வாம் ?

பொறவு
ஆளு அனக்கம் இல்லாம கெடக்கும்
ரெண்டு நாளு வீடு

வழக்கம் போல யாரும் கண்டுகிடல
பக்கத்து வீட்டு பொம்பள பாத்து அலறி
ஊர கூட்டுத வரைக்கும் .

செய்தி : கணவன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் சேய் மரணம் .

Friday, April 16, 2010

செய்யப்பட்ட தற்செயல்கள் !

பின்னொருநாளில்
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !


டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி

Monday, April 12, 2010

முகமூடியுடன் தொலைந்துபோ !

அழுதுவிடுவோம் என
பயப்படும் பொழுதுகளில்
யாரிடமும் பேசாமலிருப்பது நல்லது
முக்கியமாக நெருங்கிய நட்புகளிடம்
இதுநாள்வரையில் போர்த்தியிருந்த
கம்பீர முகமூடி கிழியக்கூடும்
நமக்கென்றிருந்த மாயபிம்பம் ஒன்று
சுக்குநூறாகும்
தனிமை அழுந்த
மதுவருந்தும் எண்ணம் மேலோங்கும்
பிறகு என்னதான் செய்யலாம்
நெரிசலான கடைவீதியில் புகுந்து
தொலையலாம்
பாலுக்காக அழும் குழந்தையிடம் சென்று
விளையாட்டுக் காட்டலாம்
அப்படி எதுவும் கிட்டாத தருணங்களில்
இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் !

Tuesday, March 30, 2010

வீணாப்போன வாதங்கள் !

குழு விவாதம் என்று
அழைத்தார்கள் - சென்றேன்
வாழக்கற்றுக்கொள் என்றான் ஒருவன்
வேலையைக் கற்றுக்கொள் என்கிறான் இன்னொருவன்
வாழ்க்கைக்காகத்தான் வேலை
வேலைக்காகத்தான் வாழ்க்கை என்று
எப்படியெல்லாமோ சொல்லிக் குழப்பிக்
கடைசியில்
இரண்டற கலந்ததுதான் வாழ்க்கை என்ற
வாதத்திற்கு வந்தார்கள்
எனக்கு சலிப்பு தட்டிவிட்டது
அடப்போங்கப்பா
ரெண்டும் எங்க இருக்கணுமோ
அங்கேயே இருக்கட்டும்னு சொல்லி
வந்துட்டேன் .

Friday, March 19, 2010

எல்லோருக்குமான ....

எல்லோருக்கும் பொதுவான நதி
ஓடிக்கொண்டே இருக்கிறது
எல்லோருக்கும் பொதுவென்று
எண்ணமுடியாதபடி
குளித்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி
படித்துறையில் கொஞ்சநேரம்
அலைந்துகொண்டிருந்துவிட்டு
அசைந்து அசைந்து
ஆழம் செல்கிறாள்
கூழாங்கற்களோடு குறுகுறுக்கிறாள்
பாறைகளோடு வன்புணர்வு கொள்கிறாள்
திரும்பவும் கரை திரும்புகிறாள்
எல்லோருக்கும் பொதுவென்று
சொல்லிவிடமுடியாது அவளை...
சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு
முங்கி எழுகிறார்கள்
சிலர்
செம்புக்குடம் நிரப்பிச் செல்கிறார்கள்
சிலர் மட்டுமே
அள்ளியெடுத்து பருகிச் செல்கிறார்கள்
எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் !

Thursday, March 18, 2010

ஒரு தலையாய்....

பாதி ராத்திரியில்
பாம்புகள் நெளியும்
கனவுகளாலேயே
விழிக்க வேண்டியுள்ளது.

உறங்கச் செல்லுமுன்
ஒன்றிரண்டு
குறுஞ்செய்திகளை
அனுப்பிவை.

மேற்கொண்டு
பாம்புகளையெல்லாம்
பட்டாம்பூச்சியாக்குவதை
நான்
பார்த்துக்கொள்கிறேன்.


************************

ஒரு
சிறு கல்லை
கையிலெடுத்துக் கொண்டு
முறைக்கிறான்
பக்கத்துவீட்டுச் சிறுவன்.
சொல்
வேறு எங்கெல்லாம்
உனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் ?
நான்
நாலு இடம் போறவன்.


************************


எதையாவது
பராக்குப் பார்ப்பதை
போலாவது
என்னையும்
பார்த்துவிட்டுப் போ!


************************

Friday, March 12, 2010

காதலியின் பெயரை முன்வைத்து ...

ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்

ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்

தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்

மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்

காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்

எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?

Tuesday, March 9, 2010

பாவ மன்னிப்பு !

பாவங்களை யெல்லாம்
மன்னிக்கிறாரென்று
கேள்விப்பட்டு
கோவிலுக்குச் சென்றேன்
படுபாவிகள்
அவரையே
கழுவிலேற்றி
வைத்திருந்தார்கள் !

Tuesday, March 2, 2010

ஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் !

முதல் பக்கம் :

எனக்கு
கொஞ்சநாளாய்
மனப்பித்து இருப்பதாக
உணர்கிறேன்
உங்களுக்கு புரியும்படி சொல்வதானால்
ஸ்கிசோஃப்ரினியா நோய் .

இரண்டாம் பக்கம் :

மூன்று வயதாகும்
என்
குழந்தை
பள்ளிக்குப் போகிறாள்
இன்றைக்கு அணிந்திருக்கும்
ஆடையின் நிறம் சிவப்பு
அழகாய்
சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறாள் .

குழந்தை இருக்கும் வீடு
அழகானதுதான்
ஆனால்
அதை பெற்றுக்கொள்வதற்கு
மனைவியும்
ஒரு வீடும்
வேண்டும் .

மூன்றாம் மற்றும் கடைசி பக்கம் :

நீங்கள்
கட்டியிருக்கும் இந்த
கழுத்து சுருக்கு
அதாவது
டை
பளிச்சென்று இருக்கிறது .

கனத்த சுருக்குகள் போடும் விதம்
பற்றி
உங்களுக்கு
சொல்லித் தரலாமென்றால்
மேஜையில் இருந்த
மஞ்சள்நிற நைலான் கயிறை
இப்போது பார்த்துக் காணவில்லை
இருங்கள்
என் தனியறையில்
இருந்தாலும் இருக்கும்
தேடிக் கொண்டு வருகிறேன் .

Friday, February 26, 2010

இருக்கும் கடவுளுக்கு !!

’என்னத்த கிழிச்சாரு கடவுள்’ என்று
வாய்க்கு வந்தபடியெல்லாம்
ஏக வசை.

பணம் இல்லவே இல்லையென்ற வட்டிக்காரன்
திடீரென அழைத்து
கடன் தந்தான்.

இருப்பைக் காட்டிக்கொள்வதற்க்காகவேணும்
கடன் தந்து உதவுகிறார்
கடவுளும் அவ்வப்போது!!

Monday, February 22, 2010

விவரங்கெட்ட பூக்களும்,வெட்கங்கெட்ட நானும்!

ஒவ்வொரு மூர்க்கமான மோதலிலும்
மாறி மாறி
சில பூக்களையும் இலைகளையும்
இழந்துகொண்டிருந்தது
காற்றிடம் மரம்.

வாடிக்கையான சண்டை போல்
இல்லாமல்
இன்று கொஞ்சம் உக்கிரமாயிருந்தது
தள்ளாடியபடியே
நான் மரத்தினடியில் அமர்ந்தேன்
சாராய நெடி ஏகமாய் அடித்தது
குடித்துவிட்டு வந்திருந்த காற்று
உலுப்பியதில்
முன்னத்திக் கிளைகளில் ஒன்றிரண்டு
முறிய தொடங்கின
மனம் ஏற்கனவே வெகுவாய்
சோர்வுற்றிருந்தது.

பூக்களும் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
காற்றும் விட்டபாடில்லை.

உதிர்ந்திருந்தவற்றில்
ஒன்றிரண்டை கைகளில் வாங்கி
சோகம் தவிர்க்க வருடினேன்
விவரங்கெட்ட பூக்களுக்கு
அப்போதும்
சிரிப்பதை தவிரவும்
வேறொன்றும் தெரியவில்லை.

வெட்கங்கெட்ட நானும்
சிரிப்பை மட்டும் களவாடி
வீடு திரும்புகிறேன்.

நன்றி வார்ப்பு கவிதை வாராந்திரி

Thursday, February 18, 2010

விஷம் விரவிய வெளி !

செந்திலுக்கு கிங்க்ஸ்
உதயாவுக்கு என்ன ஆனாலும் கோல்ட் பிளாக்தான்
புகையிலையை சுருட்டிவைத்து இழுப்பான் இன்னொருவன்
மரித்துப்போன சிகரெட் துண்டங்கள்
எந்நேரமும் பார்க்கலாம்
அறை முழுவதும்
சிலநேரம் வாசலுக்கு வெளியிலும் கிடக்கும் ஒன்றிரண்டு
எப்போதாவது சுவாசிக்கலாம் உயிருள்ள காற்றை
இப்படியாயிருக்கையில்
யாரேனும் என்னைக் கேட்டால்
எப்படி சொல்வது ?
புகை பிடிப்பதில்லையென!

Wednesday, February 3, 2010

எங்காவது தீ எரியலாம்!

வினாடிகளுக்கும்
வினாடிக்களுக்குமேயான இடைவெளியில்
ஒவ்வொருமுறையும் அவசரமாக
ஏறிப் பறக்கின்றன குட்டிப்
போர் விமானங்கள் .
பெரிது பெரிதாக
சத்தம்கேட்கும்போதெல்லாம் சிறிதாக
ஒன்று மேலெழும்பிப் பறப்பதை
அலுவலகக் கண்ணாடிச் சன்னல் காண்பிக்கிறது .
வேலையற்ற அல்லது
செய்ய விருப்பமற்ற
சோர்வான அலுவலக மதிய வேளைகளில் சுறுசுறுப்பாய்
கிளம்பும் விமானங்களைப்
பார்க்க பார்க்க ஆச்சர்யமாக உள்ளது .
"நானும் பைலட் ஆகிப் பறப்பேன் "
அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்த குழந்தைப்
பிராயத்திலிருந்து விமானங்கள் மிகப் பிடிக்குமென்றாலும்,
எங்காவது போர் மூளலாம் என
நினைத்த கணத்திலிருந்து
இந்த ' போர் விமானங்கள்' கொஞ்சம்
பயமுறுத்தத்தான் செய்கின்றன .

Sunday, January 31, 2010

ஒரு தற்கொலைக்கான காரணம்!

உங்களை கொலை செய்ய
ஒரு திட்டம் தயாராக இருந்தது
நெருங்கி பழகியாகிவிட்டது
நம்பிக்கையும் வரச்செய்தாகிவிட்டது
துரோகத்திர்க்கேற்ப
விலையும் கொண்டாகிவிட்டது
போட்ட திட்டத்தின்படியே
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த
ஓர் அந்திவேளையில்
குருதிவழிய கொலை செய்யப் படுகிறீர்கள்
தாங்கவியலா வலியின் வாய்
ஏதோ முனங்குகிறது.சில நிமிடங்கள்.
புன்னகைத்துக் கொண்டே போய்விடுகிறீர்கள் நீங்கள்
பின் நிகழவிருக்கும்
ஒரு தற்கொலைக்கான காரணத்தை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு .

Wednesday, January 27, 2010

ஒழுங்கற்றவனின் சலனங்கள் !

'எப்படி இருக்கிறாய் ?' என பெயரில்லாமல் மொட்டையாய் வெறும் எண்ணோடு வந்த குறுஞ்செய்தியை பார்த்தபொழுதில் அலுவலக வேலை முடிந்து பேருந்து வெளி கிளம்பிக் கொண்டிருந்தது . யாராக இருக்கும் ? என முதலில் யோசிக்கப் பயப்பட்டாலும் , பின்பு யோசித்து மீண்டும் குறுஞ்செய்தி வந்திருந்த அழை எண் பார்த்தேன். குறுஞ்செய்தியில் வந்து அன்னியமாய் தோன்றி நலம் விசாரிக்கும் நபர்களின் தொடர்புகளறுந்து வெகு நாட்கள் ஆகி விட்ட படியாலும் , தொடர்பிலிருக்கும் நண்பர்கள் குறுஞ்செய்தியில் நலம் விசாரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் , யாரோ யாருக்கோ அனுப்பிய செய்தி அழை எண் மாறி தவறுதலாய் எனக்கு வந்திருக்கும் என உத்தேசித்து ஒதுக்கிய கணத்தில் புதிதாக ஒரு குற்ற உணர்வு எனக்குள் தொற்றிக்கொண்ட்து. அன்னியமாய் பழகி இருந்தாலும் ,கல்லூரியில் இருந்தபோது பேசி சிரித்து சுற்றிக்கொண்டிருந்த அந்த மூன்றாம் நிலை நபர்களெல்லாம் என்னவானார்கள் என யோசிக்க வைத்த்து இந்த குற்ற உணர்வு.

மூன்றாம் நிலையிலான அல்லது நண்பன் என்ற வட்டத்திற்க்கு அடுத்த வெளி வட்டத்திலிருந்தாலும் அனைவரும் நன்றாகத்தான் பேசினார்கள்.ஒரு சிலரைத் தவிர வேறு யாராலும் நான் ஒதுக்க படவில்லை.ஒதுங்கிக்கொண்டேன். கொடியசைத்து, விசிலூதி ஓட்டம் ஆரம்பமானது.விசித்திரமான ஓட்டப்பந்தையம் . அவர்களால்தான் நிறைய ஓடினேன். நிறைய பேரைத் தாண்டியும் – தாண்டலும் தாண்டல் நிமித்தமுமேயான ஓட்டங்கள்.முன்னிருக்கும் வெளிகளைச் சுருக்கி இடைவெளி குறைப்பதற்கான ஓட்டம். விசித்திரமான பந்தையம்தான் அது. வகுப்பறையில் ஒருத்தியை காதலிக்கிறேன் என்று தெரிந்த மாத்திரத்தில், தகுதி அடிப்படையில் போட்டியிலிருந்து விலக்கி விட்டார்கள்.இப்போது அந்தக் காதல் முறிந்து விட்ட்தென தெரிந்தால் மறுபடியும் சேர்த்துக் கொள்வார்களோ ? என்னவோ? யார் கண்டது. காதல் என்றதும் என்ன காரணத்தினாலோ களிப்படைந்த சிலர், 'முறிவு' என்றதும் முகம் சுளித்தார்கள். இந்த முறை விலக்குவதற்கு முன்னர் நானே முந்திக்கொண்டு விலகி விட்டேன்.இலக்கு தெரியாமல் தலை தெறிக்க ஓடும் முயல் கூட்டத்திலிருந்து விலகி, ஆமைகளின் கூட்டத்தில் ஆமைகளுக்குள் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டு பின்பு என்னவென்றே தெரியாத ஒரு நிலைக்கு தள்ளபட்டு தனியாக இருப்பதே உத்தமம் என மாறிவிட்டது. இரு அணியினருக்குமே தலா ஒரு வெற்றிப் புள்ளி வழங்கும் புத்திசாலி விதிகள், வாழ்க்கையில் வாய்ப்பது மிக அபூர்வம். நிர்பந்திக்கும் போதும் , நிர்பந்திக்கப்படும் போதும் ஏதாவது ஒரு கணத்தில் ஒரு பக்கம் மட்டுமே வெற்றி என்பதே வாழ்க்கையின் கணக்கு அல்லது விதி.

நினைவுகளின் நேர்க்கோட்டில் பயணிக்க இயலாமல், பேரூந்தின் ஒலிப்பான் கவனத்தை திசைமாற்றியது. ஆட்டோவில் அருகருகே நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கிளர்ந்தெழும் பழைய நியாபகங்கள், எதையோ உடையென்று அணிந்து சிக்னல் கடந்து செல்லும் இந்த யுவதியை பார்க்கும் பொழுது மறைந்து மாயையாகின்றன. கடந்து சென்றவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிவப்பாயிருந்த விளக்கின் ஓளி பச்சைக்குத் தாவுகின்றது. நகரத் துவங்கிய சில நிமிடங்களிலேயே, நடைபாதையில் செருப்பு தைத்து கொண்டிருப்பவனுக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் பிஞ்சு முகம் அலைக்கழிக்கிறது என்னை. இருட்டிக் கொண்டிருக்கும் இந்நேரம் வரையில் யாருக்கு இந்த செருப்பை தைத்துக் கொண்டிருக்கிறான்? தினமும் இப்படித்தானா? ஒருவேளை இவனிக்கு மனைவி இல்லையோ ? அப்படியானால் குழந்தை ஏன் இங்கேயே உறங்க வேண்டும் ? நாளைக்கு இதுவும் வளர்ந்து செருப்புதான் தைக்குமா? அல்லது தைக்க நிர்பந்திக்கப் படுமா ? விதவிதமாய் முளைத்த கேள்விகளுக்கு பதில் தேடி குழப்பங்களுக்குள் தொலைந்து மீண்டும் சம நிலைக்கு வர முற்படுகிறேன். பாரதியின் ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எனக்குள் இருக்கும் இன்னொருவன் முன் இருக்கையில் குத்தினான். எதிர்பக்க இருக்கையிலிருந்த பெண் ஏதோ ஒரு வேற்றுக் கிரகவாசியைப் போல என்னை பார்த்தாள். பிறகு குறுநகை புரிந்தாள். என் செய்கை அவள் கடைசியாய் பார்த்த கோமாளியை நினைவு படுத்தியிருக்க வேண்டும் அல்லது முற்றிக்கொண்டிருக்கும் ஒரு பித்து பிடித்தவன் என நினைத்திருக்க வேண்டும்.இப்படித்தான் முந்தா நாள் ராணி ஒயின்சின் முன்னால் நின்று மதுவருந்தும் போது கூட நண்பன் சொன்னான், நான் முன்பு போல் இல்லையாம். ஏன் அப்படி என்று கேட்கும் முன்பே, நான் முன்பு போல் பேசுவதில்லை என ஆரம்பித்தவன் , நடை,உடை,சிரிப்பு, நண்பர்கள், பெண்கள் என என்னவெல்லாமோ பேசி கடைசியில் பித்து முற்றிவிட்ட்தாக கூறி முற்று வைத்தான்.இதுவும் வசதிதான். இந்த நிலை. கிட்டதட்ட மனம் பிணக்குற்ற ஒரு நிலை – வசதியான நிலை. யாராவது முறைத்தால் சிரிப்பு வரும்.சிரிக்க வேண்டிய சில பொழுதுகளில் எதற்கு என்று கேள்வி எழும்.கேள்விகளைப் பற்றி சிந்திக்கும் முன்னர் போன வாரத்தில் பார்த்த படத்தின் தற்கொலை காட்சி ஏதாவது நினைவில் வரலாம் அல்லது முற்றிலும் வேறுபட்ட புதிதாக ஒரு காட்சி தோன்றலாம். ஆக, எதையுமே முழுதாக யோசித்துக் கோபப்படவும் இயலாது ஆனந்தப்படவும் முடியாது.அப்படியொரு நிலையில்லாத நிலை – வசதியான நிலை.

நிலையற்ற நிலையிலிருந்து கொண்டே, இன்னும் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாளா? என பார்த்தேன். நல்ல வேளை, பார்ப்பதை நிறுத்தி அலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்திருந்தாள். பல ஆயிரங்கள் ஆயிருக்கும் போல, அலைபேசி பளபளவென்று இருந்தது. அனிச்சையாய் கையிலிருந்த என் அலைபேசியை பார்த்தேன்,பின்பு அவளைப் பார்த்தேன். அவளும் இதையே செய்தாள்.கைபேசியை பார்த்துவிட்டு பின், ஒரு சிறு எறும்பை பார்ப்பது போல அற்பமாய் பார்த்தாள் (ஒருவேளை என் மனநிலை அலைகழிக்கப் பட்டிருந்ததால் அவளின் பார்வை எனக்கு அற்பமாய் தோன்றியிருக்கலாம் ). உங்களைப் போல ஒரே அள்ளலில் ஒரு கைப்பிடி சோறு வேண்டாம், ஒரே ஓர் ஒற்றைப் பருக்கை போதும் ஏனெனில் இப்பொழுதுதான் எறும்பாகி ஊர ஆரம்பித்திருக்கிறேன். முதலில் எறும்பாய் வாழ்ந்து, எறும்பான பிறகும் மீதி நேரமிருந்தால் நீங்களே வந்து மனிதனாக வாழக் கற்றுத்தாருஙகள்,என நினைத்துக்கொண்டெ வெளியில் பார்த்தேன். நான் இறங்கும் இடம் இன்னும் வரவில்லை, இருந்தாலும் இங்கு இறங்குவதுதான் சரியென்று முடிவு செய்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

Monday, January 25, 2010

மரமாகி நின்ற மரம் !

பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும்
இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு
உச்சிக்கிளையில் தரையென இறங்கி
பின் கிளையென உணர்ந்து
தரைதொட கிளை படரும்
மழை நீருக்கு
மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு
வண்ணங்கள் பிடிபடாமல்
பாளங்கள் பிளந்த மரப்பட்டையின்
உள்ளிருந்து எட்டிபார்க்கும்
கெவுளிக்கு
ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என
எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது
இந்த மரம் வீட்டுவாசலில் !

Monday, January 18, 2010

இப்படியாய் இன்று !

தெரியாத்தனமாகப் பட்டு விட்டதென்ற
முக பாவத்தோடு அமர்ந்திருந்த
பின் இருக்கைக்காரனைப் பார்த்து
ஒரு முறைப்பு மட்டும் முறைத்துவிட்டு,
பளாரென அறை
கூச்சல் போட்டு கூட்டம்
கையிலேடுத்தச் செருப்பு என
எந்த அபாயநிலை
மந்திரத்தையும் பிரயோகிக்காமல்
புத்திசாலி பெண்
கால்களை மட்டும்
முன்நகர்த்தி வைத்துக்கொண்டாள்.
வாக்குவாதம்
கைகலப்பு
காவல் நிலையம் என
வழக்கமாய் வந்துசேரும் எதுவும் வராமல்
சுவாரஸ்யமற்று
நெரிசலோடு சென்றுகொண்டிருக்கிறது இன்றைய
அலுவல் நேர காலைப் பேருந்து !

Thursday, January 14, 2010

நன்றி விகடன் !

பச்சிளம் பொழுதுகள்!
-------------------

ஆளாளுக்கு முன்னால் வந்து
ஆச்சர்யம் காட்டியும்
சிரிப்பு மூட்டியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில்
ஊர்ந்துகொண்டிருந்த கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது
குழந்தை !

(இந்த வார விகடன் )

Monday, January 11, 2010

கனவான்களின் பெருவீதி !

வயிறு பெருத்தலையும் கனவான்களின்
வீடிருக்கும் வீதியொன்றில்
நடக்க நேரிட்டபோது
ஆச்சர்யம் விலகாமல் அடுக்குமாடிகளை
பார்த்துக்கொண்டிருந்தேன்
அகலமான தெருவின் மீது
கருப்பு வண்ணத்தில் தார் பூசப்பட்டிருந்தது
தார் பூச்சின் ஓரங்களில் அவரவர்க்குப்
பிடித்தவண்ணத்தில் குறைந்தப்பட்சம்
ஒரு சீரூந்தாவது நின்றிருந்தது
மடிப்புக் கலையாத உடையில்
பாட்டுக்கேட்டபடி
நடை பயிற்சியிலிருந்தார் ஒருவர்
கருப்பு கழுத்துப் பட்டை அணிந்த
நாயை கையில் பிடித்தபடி
அருகில் ஒரு பெண்ணும் இருந்தாள்
சிவப்பு பூக்கள் பூத்திருந்த
மரத்தினடியில் ஒரு
பணக்கார குப்பைத்தொட்டி வீங்கியிருந்தது .
சுற்றுச்சுவர் வாசலில்களில் தவறாமல்
தொங்கிய அஞ்சல் சேகரிப்புப் பெட்டியும்
நாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பும் என்னை
சற்று தள்ளி நடக்க வைத்தது
அம்மன் கோவில் தீமிதிப்பு மாதிரி
பட்டும் படாமலே நடந்து
கார்கள் , நாய்கள்
பெண்கள் , வீடுகள் எல்லாம் பார்த்து
பிரம்மித்து தெருவின் முனையைத்
தொட்டபோது
உதடோடு உதடுவைத்து ஒரு ஜோடி
முத்தமிட்டுக்கொண்டிருந்தது அந்த
அதிகாலையில் !

Friday, January 8, 2010

சுயம் மறந்து ...

வளைந்தும்
பாம்பு போல அசைந்தும்
சிற்றலைகளிநூடே
ஆடிக்கொண்டிருந்தது பனைமரம்
அரவமற்று
அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது
ஓடை !

Monday, January 4, 2010

கற்பனையில் ஒரு மிருகம் !

உறக்கத்தில்
ஆளை விழுங்கிவிடும்
அபூர்வ மிருகமொன்று நகருக்குள்
அலைகிறதாம் .
பதிலாவது குறுக்குத்தெருவில்
ரெண்டுபேரும் ,
அடுத்தத் தெருவில் ஒரு
கூலித்தொழிலாளியும் ,
நேற்று இரவில் கடிபட்டார்கள்
என்கிறார்கள் .
மாயை போன்று வருவதும்
போவதும் தெரியாமல்
தூங்கினால் மட்டுமே வருமந்த
மிருகம் கடித்து
உயிர்பிழைத்தவர்கள் பிற்காலத்தில்
பெரிய ஆட்களாகவும் ஆக
வாய்ப்புகள் நிறைய உண்டாம் .
நான்
தூங்குவதுபோல நடிக்கப்போகிறேன்,
கடிபட்டவுடன் மிருகத்தை
ஏமாற்றிவிட்டு சட்டென்று எழுந்து ஓட
வசதியாக இருக்கும் !

Sunday, January 3, 2010

மாற்று யோசனை !

மீதிச் சில்லறையாக
பழைய
ஐந்து ரூபாயை தரப்பார்த்தார் .
ரொம்பவும் கிழிந்த
நோட்டை வாங்க மனசில்லாமல் ,
என்ன செய்வதென்று
யோசித்து
பின்
இன்னொரு
சிகரெட் பிடிக்கவேண்டியதாய்ப்
போயிற்று !

( 2009 இன் கடைசி பிரதி ஆனந்த விகடனில் வெளிவந்த என்கவிதை இது )