Monday, September 28, 2009
கண்ணாடி தார்ச்சாலை
வெளிச்சங்களாய் நின்றிருந்த
உலோக மரங்கள்
நடுநிசியாதலால்
நாய்கள் கூடும் ரோடுகள்
முன்பக்கம் முழுவதுமாய் சப்பிய பைக்
மண்டை உடைந்தொளுகிய ரத்தம்
வேட்டைக்குத் தப்பிய மானொன்றைப்போல
நாலுகால் பாய்ச்சலில் வாகன விலங்குகள்
சரேலென்று கடந்து சென்றது
ஒரு கால் சென்டர் குவாலிஸ்
அதைதொடர்வதாய் ஒரு லாரியும்
பின்
ஒரு சுமோ என
வரிசையாய் ஒவ்வொன்றாய் வரத்தொடங்கின
கடைசியில் வந்தான் ஒரு சைக்கிள் காரன்
பார்த்து
படபடத்து அலறி
கூட்டம் கூடுவதற்குள்
அநேகமாய் செத்து போயிருந்தேன் நான் .
Friday, September 25, 2009
புழு(து)க் கொலை !!
வெளிக்கிருக்கச்செல்கையில்
தோட்டத்தில்
நேற்று பார்த்த இடத்திலேயே பார்த்தேனந்த மண்புழுவை .
முதுகில் ஒட்டியிருந்த
மிகச்சிறு சிறு மண் உருண்டைகளோடு
நீண்டு சற்று தடித்து
அடர் கருஞ்சிவப்பு நிறமாய்
அசைவுகளற்று இருந்தது .
மண்புழுவில் நிறைய நேரங்களில்
முன் பின் பாதிகள்
கண்டுகொள்ள முடிந்ததில்லை
மலம் கழித்துக்கொண்டே
அருகிலிருந்த விளக்குமாத்துக் குச்சியால்
லேசாக குத்தினேன்
அமைதியான இயக்கம் பார்க்கமுடிந்தது .
வீட்டுக்குள்ளிருந்து
அம்மா சத்தம்போட்டு கூப்பிட்டாள்
விருட்டென எழுந்து
குதிங்கால் ரப்பர் செருப்பால்
தலையெனப்பட்டதை
அரக்கிவிட்டு ஓடுவதற்கு முன்னால்
நசிந்து இறந்திருந்த புழுவை
யாரும் பார்க்காதவாறு
மண்ணுக்குள்
புதைத்துவிட்டு ஓடியாந்தேன் .
"சாமியிடம் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் நடந்த கொலையைப்பற்றி "
மனதுக்குள்
ஒரு திட்டமும் போட்டாயிற்று இப்போது .
Tuesday, September 22, 2009
நட்பென்பது யாதெனில் ...
கரையான்களில் ஒன்று வந்து சொல்லியது
யாரென்றேன் , தெரியாதென்றது
ஆணா ? பெண்ணா? என்றதிற்கு
ஆண் , ஆனால் என் வயசிருக்குமென்றது
என் வயதில் யாராயிருக்கும் என யோசித்து
பட்டியல் தாயாரித்து வினவியபோது
கரையான் சொன்ன அடையாளங்கள்
என் பட்டியல் பெயர்களுடன்
ஒத்துவராமல் போகவே
புதுமுகங்கள் சந்திப்புக்கு செல்வதாய்
முடிவுசெய்தாயிற்று
அரங்கம் இன்று பாதி நிறைந்திருந்தது
மூன்றாவதாய்
நீ அறிமுகம் செய்விக்கபட்டாய்
தூரத்திலிருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டேன்
அருகில் வந்து
வழக்கம்போல் சத்தம்போட்டு சிரித்து
"சாயங்காலம் பார்ப்போம் மச்சி" என்ற உன்னை
ஏமாற்ற மனம் இல்லாமல்
"இங்க டாஸ்மாக்கும் இல்ல ஒன்னும் இல்லடா "
"என்ன எழவு சொர்க்கமோ ", சலித்துக்கொண்டு
கைவசம் இருந்த குவார்டரில்
பாதியை ஊற்றிதந்தேன் ....
Monday, September 21, 2009
காக்கை கூடு !!
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .
காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .
நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .
தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .
ஆனால்
இவள்தான் .....
கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .
துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .
காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்
தயிர் பிசைந்து ஊட்டிய அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.
குறிப்பு : அவள் என்பதை வீட்டுக்காரி என்றும் அவளுக்குத்தெரியாமல் பொருள் கொள்ளலாம் .
Saturday, September 19, 2009
உன்னைப்போல் ஒருவன் !!
அண்ணாச்சி கொடுத்த
அரைக்கிலோ நாட்டுத்தக்காளி
அரைமுடி தேங்காய்
முருங்கைக்காய் இளசாக இரண்டு
முட்டைகோஸ் பாதி
கொசுறாக
கொஞ்சம் கருவேப்பிலையும் மல்லித்தளையும்
வாங்கித்திரும்புகையில்
கூப்பிட்டு
இரண்டு கையெறி குண்டுகளும்
போட்டுவிட்டார் மளிகை சாமான் பையில் .
Thursday, September 17, 2009
கூட்டிக்கொண்டு போய்விடு சீக்கிரம் !
முதுகில்தட்டி எழுப்பிவிட்டாய்
தலைக்குளித்திருந்தாய்
என்னுள் ஈரம் அப்பிக்கொண்டது .
"வெளியில் தூறல் போடுகிறது "
என்ன செய்யலாமென்பதுபோல் கண்ணடித்தேன்
கலங்கரை விளக்கத்தின் ஒளி
விட்டு விட்டு
வீட்டை வெளிச்சமாக்கிகொண்டிருந்தது
ஜன்னல்கம்பி ஊடே கடல் பார்த்தாய்
நான் ஷூக்கள் அணிந்துகொண்டேன் .
"நிறைய பேசணும்டா"
என்ன ?
"நீ வந்து பார் அதை "
எதை ?
ஆறுமணி காலையில்
அரை தூக்கத்தில் எழுப்பிபேச என்ன இருக்கும் ?
குழப்பத்தில் குழம்பிப்போய்
சொல்லும்மா ...
கட்டாயமாய் கையைபிடித்திழுத்து
முட்டளவில் கடலலை ...
குழப்பத்தில் வெறுப்பை பேசும் முன்னால்
கண் சிமிட்டி
வாயில் விரல் வைத்து
பேசாமல் வாவென்பதுபோல் சைகை செய்து
கைவீசி முன்னால் நடந்துக்கொண்டிருக்கிறாய்
கடலலையின்மேல் !!
Tuesday, September 15, 2009
கரிப்புகைகளடர்ந்த ஓட்டத்திற்கு ஆயத்தமாய்
ஒரு உலோகககுலுக்கல்.
உடைந்து சிதறி பிளிறிய
ஹார்ன் சத்தம் .
சோளம் பார்த்த ரயிலடிகள்
அல்லது - புகை படர்ந்த
சோளக்காடுகள் .
வீரியம் விழுங்கப்பட்ட வெண்கல கதிர்கள்
வேகம் குறைந்த சூரிய பொம்மை .
வெளிச்ச உறக்கத்தின்
கருப்பு பூபோட்ட போர்வைகள் மூடிய
இருட்டுக்குள் பயணங்கள் .
போர்வைகள் விலக்கிய வெள்ளை பகலொன்றில்
வெயிலேறி
சோளப்பற்கள் கொட்டிக் கிடந்த
அதே
சோளக்காட்டு தண்டவாளங்களுக்குள் உடல் நசிந்திருந்த
இரண்டு அழுக்கு சவங்களின் அடையாளம்
தற்கொலை என்றும் ஒதுக்கப்படலாம் !!
Sunday, September 13, 2009
இரு கவிதைகள் !!
டாக்டரின்
அறிவுறுத்தலை மறந்து
அரை மணிக்கொன்றாக
மூன்று போட்டபிறகும்
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்
காணமல் போனவர் பெயர்
உறக்கம் என்று !!
-----------------------------------------------------
கண்ணை மூடினால்
காலையில் பார்த்த
கோரமான சாலை விபத்தே
வந்து போகிறது !
என்னருகில் நின்றிருந்த
பார்வையற்றவர்க்கு
நல்லவேளை
இந்த பிரச்சனை இருக்காது !!.
-ஜெனோவா
Friday, September 11, 2009
இருக்கலாம் !!!
- அறை நண்பன் !!
மாதத்தின்
முதல் வாரயிறுதி நாட்களில்
ஆயிரங்கள் செலவழித்து
முடிந்துபோன முந்தைய காதல்கள் பேசி
போதையில் நிலைமறந்து
"வ்வோவ் " என்று வாந்தி எடுத்தவனை
முகங்சுருக்கி தள்ளியவன்
ஒருவேளை அவனின்
அறை நண்பனாகவும் இருக்கலாம் !!
- போலீஸ் காரர்
வேம்படிப் பிள்ளையாரின் கற்பூர தூணுக்கு முன்னால்
மண்டையில் கொட்டிக்கொண்டு
காதில் பூவுடன் தோப்புகரணம் போடும்
உள்ளூர் போலீஸ்காரர் .
-ஜெனோவா
Thursday, September 10, 2009
மூன்று கவிதைகள் !!
- தகவல்
காலையில் வர
தாமதமாகுமென்று
தகவல் சொல்லியனுப்பியிருந்தது
நிலாவிடம்
சூரியன் !.
- கிளி ஜோசியம்
அடுத்த ஆறுமாசத்துக்கு
வீடு மாறக்கூடாது
நேரம் கூடவில்லைஎன்றான் ஜோசியன் .
"கிளி உனக்கு சீட்டெடுத்து கொடுத்த
நாளுண்டா ?", என்றேன்
முறைத்தவனைப் பார்க்காமல்
கிளியை பார்த்தேன்
கூண்டுக்கம்பியை கொத்திக்கொண்டிருந்தது .
நான்
திரும்பி நடந்தேன் !
- எதிர்மறை
இன்னொரு குடம்
தேவையாயிருக்குமென
நினைக்கும்போதெல்லாம்
தண்ணீர் நின்றுவிடுகிறது
கார்பரேசன் குழாயில் !
-ஜெனோவா
--
Monday, September 7, 2009
பிரிவோம் சந்திப்போம்!
நண்பர்களே
உங்கள் அலைபேசிகளில்
என்னுடைய எண்ணை
வேண்டுமென்றே அழித்துவிடுங்கள்
சில காலத்திற்கு
உரையாடல்களை ஒத்திப்போடுவோம் .
பின்னொரு நாளில்
சந்திக்கும்போது வரும்
சில வினாடி மவுனங்களுக்காகவும்
நிகழப்போகும் தளுவல்களுக்காகவும்
இப்போது
காத்திருக்கும் தருணங்கள் அழகானவை .
-ஜெனோவா
--
Posted By ஜெனோவா to கைகாட்டி மரம் !! at 9/04/2009 06:07:00 PM
Friday, September 4, 2009
ஆதி கடவுள் !
தோழியொருத்தியுடன்
வெகுநேரம்
ஏதேதோ பற்றி
விவாதித்து விட்டு கிளம்புகையில்
"நீ என்ன சொன்னாலும் சரி
காதல்தான் முதல் கடவுள் ", என்றாள்.
நல்லவேளை
நான்
நாத்திகனென்று கூறி நகர்ந்தேன் !
-ஜெனோவா
Wednesday, September 2, 2009
பல்லியின் வால்

ஆழமாய் விழுந்தது ஒரு வெட்டு
அலறிக்கொண்டு எழ
வியர்வையாய் உறக்கம் வெளியேறியது
பயத்தில் நிரம்பிய மூத்திரப்பையால்
பாதி உறக்கத்திலேயே போகவேண்டியதாயிற்று
வேண்டுமென்றே
இழுத்து சாத்தி அடிக்கையில்
கதவிடுக்கில்
அறுபட்டு துடித்துக்கொண்டிருந்த
பல்லியின் வால்
ஏனோ
கனவில் வந்த
என்னையே பிரதிபலிப்பதாயிருந்தது !