மீதிச் சில்லறையாக
பழைய
ஐந்து ரூபாயை தரப்பார்த்தார் .
ரொம்பவும் கிழிந்த
நோட்டை வாங்க மனசில்லாமல் ,
என்ன செய்வதென்று
யோசித்து
பின்
இன்னொரு
சிகரெட் பிடிக்கவேண்டியதாய்ப்
போயிற்று !
( 2009 இன் கடைசி பிரதி ஆனந்த விகடனில் வெளிவந்த என்கவிதை இது )
Sunday, January 3, 2010
Thursday, December 17, 2009
வேறோர் இடத்திற்கு !
Tuesday, December 15, 2009
நிகழ்வுகள் !
துரத்திச் சென்று
பிடிக்கப்பார்த்தார்
சிக்னல்
தாண்டிச் சென்றவனை .
'அய்யோ, பிடிக்க வருகிறாரே ' பயத்தில்
வேகமாய் அவன் .
'ச்ச்சே , பிடிக்க முடியவில்லையே '
விரக்தியில் அவர் .
'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' பின்னால்
தொடர்ந்து சென்று சிக்னல்
தாண்டிய நான் !
Monday, December 14, 2009
எதையாவது சொல்லி ....
மிகவும் மென்மையான
இசையோடு
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
பாடல்
என் அறையில் .
புத்தி பேதலித்தவன் மாதிரி
அலறிக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ
உள்ளுக்குள் .
என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !
இசையோடு
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
பாடல்
என் அறையில் .
புத்தி பேதலித்தவன் மாதிரி
அலறிக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ
உள்ளுக்குள் .
என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !
Tuesday, December 8, 2009
ஈரம் !

இட்லியும்
மல்லிச்சட்னியும் நம்மூர் மாதிரி
நல்லாயிருக்கும்னு
கூட்டிட்டுப் போனான் நண்பன் .
சாம்பார் கூட விசேஷமாகத்தான் இருந்தது
பில்லும் குறைச்சல்தான்
நாளைக்கும் இங்கயே சாப்பிட
வந்திருப்பேன்
கை அலம்புகையில்,
தடுப்புக்குப் பின்னால் தொட்டித்
தண்ணீரில் நின்றுகொண்டு
தட்டைக் கழுவும் உன்
முகத்தை மட்டும்
பார்க்காமலிருந்திருந்தால் !
Friday, December 4, 2009
சௌகரியங்கள் !

இருக்கும் வீட்டை மாற்றி
வேறுவீடு பார்க்கலாமென
முடிவெடுத்தாகிவிட்டது .
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
முன்புபோல் இப்பொழுதெல்லாம் முடிவதில்லை
தரைத்தள வீடு அவசியம்.
பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்
பையனைக் கூட்டிப்போக வர
இலகுவாக இருக்கும்.
அடுக்குமாடி
குடியிருப்புகளில் எனக்கு
அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை .
புதுஇடத்தில் நல்ல
வேலைக்காரி அமைந்துவிட்டால்
மனைவியோடு மல்லுக்கட்டல் இருக்காது .
பூங்கா ஒன்றும் அருகிருந்தால்
அப்பாவின்
சாயங்காலங்கள் இனிமைப்படும் .
எல்லாம் ஒருவழியாய்
அமைந்துவிடலாம் ஆனால் என்ன
அம்மாவுக்குதான்
சௌகரியப்படாமல் போகக்கூடும் புதுவீடு ,
என்ன செய்ய ?
இப்போதெல்லாம்
இந்தியக் கழிவறைகள் கொண்ட
வீடுகள் கிடைப்பதுதான்
அபூர்வமாயிருக்கிறது இந்நகரத்தில் !.
(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )
Tuesday, December 1, 2009
வேடிக்கை !

நிச்சயமாய்
அறுபது வயதிற்குமேல் இருக்கும் அவருக்கு
ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வெளியே
சாலையோரத்தில்
பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார் .
சிவப்பு, பச்சை,நீலமென்று
வேறு வேறு நிற வடிவங்களில்
பஞ்சு பஞ்சாய் பொதிந்து
குண்டு குண்டாய் பொம்மைகள் வைத்திருந்தார் .
குழந்தைகளுக்கு வைக்கும்
கிரீடமொன்றை வைத்துக்கொண்டும்
ஜிகினா பூ சட்டை ,
சிவப்பு பச்சை சேர்ந்த நிறத்தில்
பிளாஸ்டிக் கண்ணாடி என
ஒரு குருகுறுப்போடவே சுற்றிக்கொண்டிருந்தார் .
பாவாடைச் சட்டை சிறுமிகள் அவரைத்
தொட்டு விட்டு ஓடிவந்து
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் .
பிடிக்கவருவதைப் போல பாவலாக்காட்டி
பின்னாலேயே ஓடிவந்தவர்
எதிர்ப்பக்க உணவகத்தை ஒரு
பார்வை பார்த்துவிட்டு
மீண்டு(ம்)
துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார் சிறுமிகளை இப்போது !
Subscribe to:
Posts (Atom)
