Sunday, August 9, 2009

நீ எங்கிருக்கிறாய் ?

இந்த
ஆயிரம் முகங்களில்
எந்த முகம்
உன் முகம் !

வாசலுக்கு முன்னால்
உதரிப்போட்ட செருப்புகள் போல
களைந்து கிடக்கின்றன
கடலினுள் கட்டுமரங்கள் !

பெரிய நந்திக் கோவிலின்
தெப்பக்குளத்து படித்துறையை போல
அந்த பாற்கடலின் படித்துறையாய்
நம் அழகிய ஊர் !

அலையின் மடியிலே -கடலின் கரையிலே
நிலா முற்றமாய் உன் வீடு !
நிலவே நிழல் சாட்சியாய்
உன் முகம் !


காலையில்
ஒருமணிநேரம் வரும்
நல்ல தண்ணீர் பிடிக்க
கையில் குடத்தோடு நீ !
ஒரு மணிநேரத்தில்
ஓரிருமுறை வந்துபோகும்
உன்னை பிடிக்க
கையில் வலையோடு நான் !


ஒரே ராட்டினத்தில் சுற்றினாலும்
எதிரெதிர் திசைகளில் செல்லும் பெட்டிகள் போல
நம் பார்வைகள் !

என் நேர்க்கோட்டு பார்வையில்
உன் கண்கள் நாணி வளைகின்றன !
வெகு சில சமயங்களில் - முட்டிக்கொள்ளும்
உன் தீக்குச்சி பார்வையால்
என் ரோமங்கள் பற்றிஎரிகின்றன !

ஆதாமுக்கு
பாதி கடித்த ஆப்பிளை வழங்கிய காதல - உன் கையால்
கொஞ்சமும் குறையாக் காரத்துடன்
ஒரு பச்ச மொளகாயை தந்தது எனக்கு !
கடலுக்கு போகுமுன்
உன் அப்பாவுடன் குடித்த கஞ்சிக்கு
'தொட்டுக்க' கொடுத்து அது !
உன் சுண்டு விரல் போலவே இருந்த - அந்த மிளகாயை
கடிக்க கூட மனமில்லை ...
சும்மா ... ஒரு கடி கடித்துவிட்டு
எதோ நீ தந்த கடிதம் போல
பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன் !

கடல் முடிந்து , கரையேறுகையில்
ஆவி பறக்கும் கடுங்காப்பி வாளியுடன்
காற்றில் அரைத்தாவணி பறக்க
ஓடி வரும் உன்னை பார்க்கவே
சில மீன்கள் சாகாமல் துள்ளிக்கொண்டிருக்கும் !

நீ
தொட்டபிறகே கரையேருவதாய்
கட்டுமரம் அடம்பிடிக்கும் !
ஒருவழியாய் உன் நினைவுகளைத் தவிர - மற்றனைத்தையும்
ஒதுங்க வைத்துவிட்டு
வந்தமர்வேன் உன் வீட்டு முற்றத்தில் ...

கரிய சுட்ட கருவாட்டு வாசனையோடு
உன் வாசனையும் சேர்த்து
கஞ்சி தருவாய் - கஞ்சியை விட்டு விட்டு
உன் வாசனையை மட்டும் உறிஞ்சுவேன் நான் !

தண்ணீர் குழாய் ....
பச்சை மிளகாய் ...
ஆவிபறக்க கடுங்காப்பி ..
உன் வாசனையில் கஞ்சி ...

இப்போதெல்லாம்
சிரிக்க பார்க்கிறாய் ...
பார்க்க சிரிக்கிறாய் ...
காலை விரிந்து மாலை சுருங்கும் வரை
கூடவே இருக்கும் வலை போலவே நீயும் !

இம்சித்து திரிந்தாய்...
இரண்டற கலந்தாய் ...
என் இதய காந்ததினுள்ளே
திசை முள்ளாய் வந்தமர்ந்தாய் !

உன் வீட்டு முற்றம்
என் கோவிலானது -
உன் நினைவுகள்
என் சட்டை சுருக்கங்களாயின !


அன்று
பல ஊர் கூடி தேர் இழுக்கும்
அந்த வருட
அம்மன் கோவில் திருவிழா !

சில பத்தாயிர
சனங்கள் கூடி தேரிழுக்க
கடல் ஓரக் கடைவீதியில்
உன் பட்டு கைகளுக்கு
பளிங்கு வளைகள்
வாங்கி வைத்தோம் !

கண்ணாடி வளையல் என்றாலும்
என்னிடமிருந்து வந்தால்
வைர வளையல் என்று சொல்லி
தோள் சாய்ந்தாய் !


தேர் இழுப்பின் முடிவிலே
கடலில் கால்னநிக்கும் சடங்குக்காய்
மொத்த சனமும்
கடலை நோக்கி இறங்கிட ..
கடை வீதி மூச்சு விட முடியாமல் திமிறித்தான் போனது !
அப்போது உனக்கந்த ஆசை வந்தது
முதலில் நீதான் கால் நனைக்க
வேண்டுமென்ற விளையாட்டு ஆசை !
வாங்கி வைத்த வளயல்களோடு
உன்னையும் கைகளில் அள்ளிக்கொண்டு
கூட்டத்திற்கு முந்திக்கொண்டு - கடலடியில்
கால் நனைத்த வினாடி சந்தோசத்தின் சிரிப்புகள் முடியுமுன்னரே
வந்து தொலைத்து - அந்த
ராட்சச பேரலை ...

ஒரு
காட்டுயானையின் தாக்குதலை
தாங்கமுடியாத
வாழைமரத்தைப் போல -
பிடுங்கி எறியப்பட்டோம் இருவரும் ...
வினாடிப் பொழுதுகளில்
மொத்தக்கூட்டமும் உள்ளே இழுக்கப்பட
என்னோடு
பிணைக்கப்பட்டிருந்த உன் கையை பிடித்து
வெளியே இழுத்த கணத்தில்
மீண்டும் ஒரு அலை ...
அவ்வளவுதான்
என்னை பார்த்து கடைசியாய்
சிரித்த உன் முகம் - கை நழுவி செல்கையில்
அந்த கண்ணாடி வளையல்களை மட்டுமே விட்டுசென்றது !


உன் கல்லறை
என் கோவிலானது !
உன் நினைவுகள்
என் சிக்கல் விழுந்த வலைகளாயின !

கடல் கொண்டாலும்
நீ வருவாய் !
என்றாவது என் கட்டுமரத்தை தொடுவாய் !

இன்றும் பல ஆயிர சனங்கள்
கால் நனைக்க செல்கின்றன ...
இந்த ஆயிரம் முகங்களில்
எந்த முகம் உன் முகம் ?
எந்த கைகள்
என் பிடியை நழுவி சென்ற கைகள் ?

-ஜெனோவா


3 comments:

Anonymous said...

joe.....
Really Superb....Ithu engo paditha mathri iruke...

Anonymous said...

joe.....
Really Superb....Ithu engo paditha mathri iruke...

Anonymous said...

இந்த ஆயிரம் முகங்களில்
எந்த முகம் உன் முகம் ?
எந்த கைகள்
என் பிடியை நழுவி சென்ற கைகள் ?